சேது சமுத்திர மாற்றுப்பாதை ஆய்வு பணி நிறுத்தம்

21/08/2010 20:06

சேது சமுத்திர திட்டத்தின் மாற்றுப்பாதை ஆய்வுப் பணிகள், வானிலை மாற்றம் காரணமாக மீண்டும் தடைபட்டுள்ளன. ராமர் பாலம் சர்சையை தொடர்ந்து, சேது சமுத்திர திட்டப்பணி தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றது. யாருடைய மனதையும் புண்படுத்தாமல், மாற்றுப்பாதையில் திட்டத்தை நிறைவேற்றும் வழிமுறைகளை காணுமாறு, கோர்ட் தரப்பில் மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பச்சோரி தலைமையில் இதற்காக கமிஷன் ஒன்று தொடங்கப்பட்டு, மாற்றுப்பாதை ஆய்வுப் பணிகளை மத்திய அரசு தொடங்கியது.  இருந்தும் இக்கமிட்டியின் பணிகள், மந்தமாக இருந்தன.

இத்திட்டம் தொடர்பான வழக்கு விசாரணை, சில மாதங்களுக்கு முன் வந்த போது, "மாற்றுப்பாதை ஆய்வின் தன்மை' குறித்து மத்திய அரசிடம் வினா எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய அரசு தரப்பில் திருப்திகரமான பதில் தரப்படவில்லை. 2011 மார்ச் இறுதிக்குள் மாற்றுப்பாதை ஆய்வுப் பணிகள் குறித்து அறிக்கை அளிக்குமாறு மத்திய அரசுக்கு வலியுறுத்தப் பட்டது.   ஆண்டுகள் கடந்த நிலையில், சேது சமுத்திர மாற்றுப்பாதை ஆய்வு பணிகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் துவங்கப்பட்டன. இதற்காக தேசிய கடல்ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் மன்னார் வளைகுடா பகுதியில் முகாமிட்டனர். ஆய்வுக்கான நிலைமானிகள், அளவை மானிகள் பொருத்தப்பட்டன. கடந்த ஏப்ரலில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால், பொருத்தப்பட்ட கருவிகள் பல கரை சேர்ந்தன. இதனால் கடல் அலையின் தன்மையை அறியும் சோதனை பாதிக்கப்பட்டது.  புயல் சின்னம் முடிவுக்கு வந்த பின் மீண்டும், கடலில் ஆய்வுப் பணியை ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் தொடங்கினர். தற்போது மன்னார் வளைகுடாவில் வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதால், மழை பொழிய வாய்ப்புள்ளது. இதனால் கருவிகள் சேதமடையாத வண்ணம், மாற்றுப்பாதை பணியை மீண்டும் நிறுத்தியுள்ளனர்.

கோர்ட் காலக்கெடு விடுத்த நிலையில் ஏற்கனவே இருமுறை மாற்றுப்பாதை பணி தடைபட்ட நிலையில்,  தற்போது மீண்டும் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், குறித்த நேரத்தில் ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க முடியுமா, என்ற இக்கட்டான நிலைக்கு அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
 

dinamalar