புதுவருட கொண்டாட்டங்கள் தேவையா?

29/12/2011 14:41

 

இந்திய கலாச்சாரம் உலகத்திற்கே முன்னோடி கலாச்சாரம் என்ற பெயர் பெற்றது. தனி மனித ஒழுக்கங்களை வழியுறுத்தும் தத்துவங்கள் மதங்கள் சார்ந்த கொள்கைகள் போன்றவை அப்படிப்பட்ட தோற்றத்தை இந்த உலகிற்கு நமது கலாச்சாரப் பெருமையை எடுத்துச் சென்றது எனலாம்.

ஆனால் சில வருடங்காக இந்தியா மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக வளர்ந்து வருகிறது. அரசியல், பொருளாதாரம், தொழிற்நுட்பம் போன்றவற்றைத் தாண்டி பல்வேறு சமுக மாற்றங்களைப் பெறத் துவங்கிவிட்டது. மேற்கத்திய நாடுகள் மீது நம் மக்களுக்கு உள்ள மோகம் நமது கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளை எல்லாம் மறந்து மேலை நாட்டுக் கலாச்சரத்தை நோக்கி பயணித்து அதில் பல சாதனைகளையும்(?) பெற்றுள்ளது. அதில் முக்கியமானதொரு சாதனை(!)யாக சுமார் 24 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகளைப் பெற்று, எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையில் உலகில் மூன்றாவது நாடு என்ற பெருமையை(?) இந்தியா பெற்றுள்ளது.

அது மட்டுமின்ற இந்திய இளைஞர்களின் வாழ்க்கை சம்மந்தமான பல்வேறு ஆய்வுகள் ஒட்டு மொத்த இந்தியர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வண்ணம் உள்ளது. வளர்ந்த பெரிய நகரங்களின் நாகரீகம் முற்றிலும் மாறுபட்டு, திருமணத்திற்கு முந்தை மற்றும் பிந்தைய தவறான உறவுகள் அதிகரித்துவிட்டன. அதை எல்லாம் மிகச்சாதாரணமாக எடுத்துக் கொண்டு மனம் போன போக்கில் வாழும் இளைஞர் மற்றும் இளைஞிகளின் நடவடிக்கைகள் எந்த ஒரு சாதாரண இந்தியனாலும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு கட்டுப்பாடற்ற நிலைக்குச் சென்று விட்டது.

இளைஞர்களின் இது போன்ற நடவடிக்கைகள் அதிகரிக்க சினிமா அல்லாத வேறு சில காரணங்களும் உள்ளன. அவைகளில் இளைஞர்களால் தவறாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு சில விழாக்களும் உள்ளன. அவற்றில் முதலிடத்தில் உள்ளதுதான் இந்தப் புதுவருடக் கொண்டாட்டங்கள். டிசம்பர் 31ம் நாள் இந்தியாவின் பெரும் நகரங்களில் எந்த ஹோட்டலிலும், எந்த கேளிக்கை விடுதிகளிலும், எந்த பாரிலும் இடம் கிடைக்காது. முன் பதிவுகள் என்று சொல்லி கல்லுரி மாணவ மாணவிகள், வேலை செய்யும் இளைஞர் இளைஞிகள், நண்பர்கள் என்ற போர்வையில் ஆண்களும் பெண்களும் விடிய விடியக் கொண்டாட நாடும், நாட்டின் சட்டங்களும் காவல்துறை பாதுகாப்புடன் அனுமதிக்கிறது. இது போல் மற்றொரு விழா பிப்ரவரி மாதம் 14 ஆம் நாள் கொண்டாட்டம்.

இது போன்ற கொண்டாட்டங்கள் கேளிக்கைகள் என்ற பெயரில் பொழுது போக்கு என்ற பெயரில் பல்வேறு சமூக மாற்றங்களை இளைய சமுதாயத்தினரின் மத்தியில் உருவாக்கிவிட்டது. மது, மாது, சூது மற்றும் பிற போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகும் பெண்களும் ஆண்களும் இது போன்ற நாட்களை தமது பல்வேறு அந்தரங்க தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள், ஈவ் டீசிங் மற்றும் பாலியல் பலாத்காரங்களைவிட இது போன்ற நாட்களின் கொண்டாட்டத்திற்கு மத்தியில் தமது மானத்தையும் தன்னையும் இழந்துவிடும் பெண்கள், சதவிகித அடிப்படையில் அதிகம் என்கிறது ஒரு ஆய்வுத் தகவல். ஆணும் பெண்னும் தனித்திருந்தாலே அது பலதரப்பட்ட உறவுகளுக்கு வழிவகுக்கும் என்று வேதங்கள் அறிவுறுத்துகின்றன.

அப்படிப்பட்ட சூழல்களை உருவாக்கிக் கொள்ள விரும்பும் ஆண்கள், பெண்களைத் தமது தேவைகளுக்குப் பயன்படுத்தத் துவங்கி விடுகிறார்கள்.

சந்தோசங்களை பகிர்ந்து கொள்வதையோ அல்லது இது போன்ற நாட்களை மகிழ்ச்சியுடன் தமது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதையோ நாம் குறைகாண முடியாது. அவையெல்லாம் இல்லாவிட்டால் நட்பிற்கு அர்த்தமில்லாமல் போய்விடும். எந்தச் சூழ்நிலையிலும் தமது வரம்புக்குள் பழகிக் கொள்வதே எல்லா ஆண்களுக்கும் பெண்களுக்கும் நல்ல பண்பாகும்.

இந்தியா போன்ற சுதந்திரமான நாட்டில் விபச்சாரத்தைத் தடுக்க சரியான சட்டம் இல்லாத காரணத்தாலும், சமூக கலாச்சார மாற்றத்திற்கு எதிராக யாரும் எந்த முயற்சியும் எடுக்காத நிலையும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இன்னும் மெத்தப்படித்த மருத்துவ மேதைகள்கூட தடுக்கப்பட வேண்டிய கலாச்சாரத்திற்கு எதிரான நடவடிக்கைகளை வெளிப்படையாக ஆதரிக்கின்றனர்.

உதாரணத்திற்குச் சொல்லப்போனால் கடந்த சில மாதங்களுக்கு முன் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. அதில் மத்திய அமைச்சராக இருக்கும் குலாம் நபி ஆசாத் அவர்கள் ஓரினச் சேர்க்கைவாதிகளைக் கடுமையாகசாடி அந்த கருத்தரங்கத்தில் பேசினார். அதை ஆதரிக்காவிட்டாலும் பரவாயில்லை, அவரது அமைச்சரவையின் கீழ் செயல்படும் அந்த எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் அவரது பேச்சுக்குக் கண்டனம் தெறிவிக்கிறது. ஏன் என்று கேட்டால் "பாலியல் உறவுகளைப் பாதுகாப்பாக எப்படி யாரும் தாம் விரும்பும்படி அமைத்துக் கொள்ளலாம். அது தடுக்கப்பட வேண்டிய ஒன்றல்ல" என்று விளக்கம் தருகின்றனர்.

பூனையைப் பாலுக்குக் காவல் வைத்தது போல இது போன்ற சிந்தனைவாதிகள்தான் எய்ட்ஸைக் கட்டுப்படுத்த போகிறார்கள். அது போல பாலியல் சம்மந்தமான கேள்விகளுக்கு என்று சில தொலைக்காட்சிகள் சில நிகழ்ச்சிகளை வழங்குகிறது. அதில் எல்லாம் சமூக கலாச்சாரத்திற்கு எதிரான கருத்துக்களை மருத்துவர்கள் என்று இருப்பவர்கள் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்தியாவில் ஊழலுக்கு எதிரான ஒரு மசோதா தேவையோ இல்லையோ, இது போன்ற பாலியல் சம்மந்தமான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த, சமூக பாதுகாப்பை உறுதி செய்ய, எதிர்கால இளைய சமூகத்தைப் பாதுகாக்க, வளமான இந்தியாவை உருவாக்க ஒரு மசோதா அவசியம். தமது பிரச்சனைகளுக்காக மட்டும் சமூக வலைத்தளங்களைக் கட்டுப்படுத்த நினைக்கும் அரசியல்வாதிகள் நம் கலாச்சார மாற்றத்திற்கு எதிராகவும் களம் இறங்கவேண்டும். செய்வார்களா…..

- அபூ அஸ்ஃபா


Read more about புதுவருட கொண்டாட்டங்கள் தேவையா? [1763] | சிறப்பு கட்டுரைகள் | கட்டுரைகள் at www.inneram.com