8. ஜோஹான் கூட்டன்பர்க் (1400 - 1468)

8. ஜோஹான் கூட்டன்பர்க் (1400 - 1468)

8. ஜோஹான் கூட்டன்பர்க் (1398 - 1468)

நவீன அச்சுக் கலையைக் கண்டுபிடித்தவர் ஜோஹான் கூட்டன்பர்க் ஆவார். இயங்கக் கூடிய எழுத்துருவையும் (Movable Type) அச்சு எந்திரத்தையும் பயன்படுத்தி அச்சிடும் முறையை முதலில் கண்டுபிடித்தவர் இவர். இவரது முறையைக் கொண்டு எழுத்து வடிவிலான ஏராளமான நூல்களை விரைவாகவும், துல்லியமாகவும் அச்சடிக்க முடிந்தது.

எந்த ஒரு புத்தமைப்பும் தனியொரு மனிதனின் மூளையிலிருந்து முற்றிலுமாக உதிப்பதில்லை. அச்சுக் கலையும் அதற்கு விதி விலக்கன்று. அச்சுப்பாள அச்சு முறையைப் போன்றே அதே தத்துவத்தின் படி செயற்படுகின்ற முத்திரை அச்சுக்களும், முத்திரை வளையங்களும் பண்டைக் காலம் முதற்கொண்டே அச்சடிக்கப் பயன்படுத்தப்பட்டு வந்தன. கூட்டன்பர்குக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சீனாவில் அச்சுப்பாள அச்சுமுறை கையாளப்பட்டு வந்தது.

உண்மையில், கி.பி. 868 இல் அச்சிடப்பட்ட அச்சுப் புத்தகம் ஒன்று žனாவில் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. கூட்டன்பர்குக்கு முன்பு ஐரோப்பாவில் கூட இந்த வகை அச்சு முறையை அறிந்திருந்தனர். ஒரு நூலின் பல அச்சுப் படிகளை எடுப்பதற்கு அச்சுப்பாள அச்சு முறையினால் முடிகிறது. எனினும், சீனாவில் 11 ஆம் நூற்றாண்டின் மத்தியவாக்கில் இயங்கக் கூடிய எழுத்துரு கண்டுபிடிக்கப்பட்டது. இதைக் கண்டுபிடித்தவர் பி-ஷெங் என்பவர். இவர் தயாரித்த எழுத்துரு மண்ணாலானது. இந்த எழுத்துரு, நீடித்து உழைக்கக் கூடியதன்று. எனினும், இந்த எழுத்துருவில் மற்ற சீனர்களும், கொரியர்களும் பல சீர்த்திருத்தங்களைச் செய்தார்கள். கூட்டன்பர்குக்கு நீண்ட காலத்திற்கு முன்பே கொரியர்கள் உலோக எழுத்துருவைப் பயன்படுத்தி வந்தார்கள். பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்திலே, அச்சு எழுத்துருக்களைத் தயாரிக்கும் ஒரு வார்ப்படச் சாலைக்கு கொரிய அரசு ஆதரவளித்து வந்தது. எனினும், பி-ஷெங்கை ஒரு செல்வாக்கு மிக்க மனிதராகக் கருதுவது தவறாகும். முதலாவதாக, இயங்கக் கூடிய எழுத்துருக்களைத் தயாரிக்கும் முறையை சீனாவிலிருந்து ஐரோப்பா கற்றுக் கொள்ளவில்லை. தானே கண்டுபிடித்தது. இரண்டாவதாக, இயங்கக் கூடிய எழுத்துகளைப் பயன்படுத்தி அச்சிடும் முறை சீனாவில் கூட அண்மைக் காலம் வரையில் பரவலாகப் பயன்படுத்தப் படவில்லை. மேலை நாட்டிலிருந்து தான் இந்த நவீன அச்சு முறையைச் சீனர்கள் கற்றுக் கொண்டார்கள்.

நவீன அச்சு முறையில் நான்கு முக்கியமான பகுதிகள் அடங்கியுள்ளன. முதலாவது, இயங்கக் கூடிய எழுத்துரு. இந்த எழுத்துருக்கள் ஒரு குறிப்பிட்ட நடைமுறைப் படி அடுக்கப்பட்டு, ஒரு நிலையில் பொருத்தப் படுகின்றன. இரண்டாவது, அச்சு எந்திரம். மூன்றாவது, பொருத்தமான அச்சு மை. நான்காவது, அச்சிடுவதற் கேற்ற காகிதம் போன்ற பொருத்தமான அச்சிடு பொருள். பல ஆண்டுகளுக்கு முன்னரே சீனாவில் சாய் லுன் (Ts'ai Lun) என்பவர் காகிதத்தைக் கண்டுபிடித்திருந்தார்.

காகிதத்தைப் பயன்படுத்தும் முறை, கூட்டன்பர்க் காலத்திற்கு முன்பே மேலை நாடுகளுக்குப் பரவியிருந்தது. அச்சு முறையின் நான்கு பகுதிகளிலும் மிக முக்கியமான சீர்திருத்தங்களை கூட்டன்பர்க் செய்தார். எடுத்துக் காட்டாக, எழுத்துருக்களைத் தயாரிப்பதற்குப் பொருத்தமானதொரு உலோகக் கலைவையை அவர் கண்டு பிடித்திருந்தார். எழுத்துருப் பாளங்களைத் துல்லியமாகவும், சரி நுட்பமாகவும் வார்ப்பதற்கான வார்ப்படத்தை அவர் உருவாக்கினார். எண்ணெய் அடிப்படையாகக் கொண்ட அச்சிடுவதற்குப் பொருத்தமான அச்சு எந்திரத்தையும் தயாரித்தார்.

கூட்டன்பர்க்கின் தனிக் கண்டுபிடிப்புகள் அல்லது சீர்திருத்தங்களில் எதனையும் விட அச்சுக் கலைக்கு அவர் ஒட்டு மொத்தமாக ஆற்றிய தொண்டு தான் மிகப் பெரியது. அவர், அச்சுக் கலையின் அனைத்துக் கூறுகளையும் ஒருங்கிணைத்து, அதனைப் பயன் திறன்மிக்க படைப்பாக அமைப்பு முறையாக உருவாக்கினார். அதற்காகவே அவர் பெருமைக்குரியவராகிறார். முந்தைய புத்தமைப்புகள் அனைத்தையும் போலன்றி அச்சு முறை என்பது அச்சுப் படிகளை ஏராளமாக எடுக்கும் ஒரு செய்முறை. தனியொரு வில்லையும் அம்பையும் விட, தனியொரு சுழல் துப்பாக்கி அதிக ஆற்றல் வாய்ந்த ஆயுதமாகும். தனியொரு அச்சுப் புத்தகத்தின் மூலம், தனியொரு கையெழுத்துப் புத்தகத்தினால் உண்டாகும். அதே விளைவு தான் விளையும். ஒரு நூலின் பல படிகளை அச்சிடுவதால் ஏற்படும் நன்மைகள் ஏராளம். கூட்டன்பர்க் உருவாக்கியது தனியொரு எந்திரமன்று; தனியொரு சாதனமும் அன்று; தொடர்ச்சியான சீர்த்திருத்தங்கள் மட்டுமல்ல; ஒரு முழுமையான உற்பத்திச் செய்முறையை அவர் கண்டுபிடித்தார்.

கூட்டன்பர்க் வாழ்க்கை பற்றிக் கிடைக்கும் தகவல்கள் மிகக் குறைவு . ஜெர்மனியிலுள்ள மெயின்ஸ் என்ற நகரில் அவர் 1400இல் பிறந்ததாகக் கூறுவர். 15 ஆம் நூற்றாண்டின் மத்தியில் அவர் அச்சுக் கலைக்குத் தமது தொண்டுகளை ஆற்றினார். "கூட்டன்பர்கின் விவிலியம்" (Guttenberg's Bible) எனப் புகழ் பெற்ற இவரது தலைசிறந்த நூல் 1554 ஆம் ஆண்டு வாக்கில் அச்சிடப்பட்டது. அவர் கண்டு பிடித்த சாதனத்தினாலேயே அவரது நூல்கள் அச்சிடப்பட்ட போதிலும், அவர் எழுதிய நூல்களில் ஒன்று கூட 'கூட்டன்பர்க் விவிலியம்' உட்பட அவருடைய பெயர் இல்லை. அவர் வாணிகத்தில் திறமை வாய்ந்தவராகத் தோன்றவில்லை. அதனால், தமது கண்டுபிடிப்பைக் கொண்டு பணம் சம்பாதித்ததாகவும் தெரியவில்லை. அவர் மீது பல வழக்குகளும் தொடரப்பட்டன. அவற்றுள் ஒரு வழக்கின் விளைவாக, இவர் தமது அச்சு எந்திரத்தை இழக்க நேரிட்டது. கூட்டன்பர்க் 1468-ஆம் ஆண்டு மெயின்ஸ் நகரில் காலமானார்.

கூட்டன்பர்க்குக்குப் பிந்திய காலத்தில் சீனா, ஐரோப்பா இரண்டின் முன்னேற்றத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, உலக வரலாற்றில் கூட்டன்பர்கின் சாதனை எத்துணை பாதிப்பை ஏற்படுத்தியது என்பது தெளிவாகும். கூட்டன்பர்கின் தோற்றத்திற்கு முன்பு வரை சீனாவும், ஐரோப்பாவும் தொழில் நுட்பத் துறையில் சரி நிகராகவே முன்னேறியிருந்தன. ஆனால், நவீன, அச்சுக் கலையைக் கூட்டன்பர்க் கண்டுபிடித்த பின்பு ஐரோப்பா மிகத் துரிதமாக முன்னேறியது. கூட்டன்பர்க் நவீன அச்சுக் கலையைக் கண்டுபிடித்த பின்பு நெடுங்காலம் வரையில் சீனாவில் பழைய அச்சப்பாள அச்சுமுறையே தொடர்ந்து பயன்படுத்தப்பட்டது. அத்துடன் அதன் முன்னேற்றம் மிக மெதுவாகவே நடந்தது. சீனா இவ்வாறு பின் தங்கியதற்கு நவீன அச்சுக் கலையின் கண்டுபிடிப்பு ஒன்றை மட்டுமே காரணமாகக் கூற முடியாது. எனினும், அது ஒரு முக்கியக் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.

இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களில் மூவர் மட்டுமே கூட்டன்பர்க்குக்கு முந்திய 500 ஆண்டுகளில் வாழ்ந்தவர்கள் என்பதும், 67 பேர் அவருக்குப் பின்தைய 500 ஆண்டுகளில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. நவீன காலத்தில் புரட்சிகரமான மாறுதல்களை ஏற்படுத்துவதில் கூட்டன்பர்கின் கண்டுபிடிப்பு மிகப் பெரிய பங்கினை - உயிரோட்டமான பங்கினை - வகித்திருக்கிறது என்பதை இது குறிக்கிறது.

அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல் வாழ்ந்திராவிட்டாலுங்கூட வரலாற்றில் அதே கால அளவின் போது தொலைபேசி கண்டுபிடிக்கப் பட்டிருக்கும் என்பது உறுதி. வேறு, பல கண்டுபிடிப்புகள் குறித்தும் இதையே கூறலாம். ஆனால், கூட்டன்பர்க் தோன்றியிருக்கா விட்டால், நவீன அச்சு முறையின் கண்டுபிடிப்பு பல தலைமுறைகள் தாமதப் பட்டிருக்கும். பிற்கால வரலாற்றில் கூட்டன்பர்கின் கண்டுபிடிப்பினால் ஏற்பட்ட அளவிறந்த பாதிப்பினைக் கருதும் போது, இந்தப் பட்டியலில் உயர்ந்ததோர் இடத்தைப் பெறுவதற்கு அவர் முற்றிலும் தகுதியுடையவராவார்.