காஷ்மீர் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண 8 அம்சத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது

26/09/2010 09:44

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அனைத்து தரப்பினருடன் சுமுகத் தீர்வு காண நீடித்த பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முக்கியஸ்தர்கள் அடங்கிய தொடர்புக் குழுவை நியமிப்பது உள்ளிட்ட 8 அம்சத் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் தில்லியில் சனிக்கிழமை நடந்தது. அப்போது இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.

கடந்த சில மாதங்களாக காஷ்மீர் மாநிலத்தில் நிலவிய அசாதாரண சூழ்நிலையை முடிவுக்கு கொண்டுவர எட்டு அம்சத் திட்டம் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுவதாக கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்தார்.

மத்திய படைகளை திரும்பப் பெறுவது, பாதிக்கப்பட்ட பகுதிகள் தொடர்பான அறிவிக்கையை மறு ஆய்வு செய்வது தொடர்பாக விரிவாக பதில் அளிக்க அவர் மறுத்துவிட்டார்.

கடந்த ஜூன் மாதம் சோபூரில் நடந்த கலவரத்தின்போது கும்பலைக் கலைக்க மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் ரப்பர் குண்டால் சுட்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த நான்கு மாதங்களாக மாநிலத்தில் பெரும் வன்முறை ஏற்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலீஸôருக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலீஸôருக்கும் இடையே நடந்த மோதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 105-ஐ தாண்டிவிட்டது. நாளுக்கு நாள் நிலைமை மோசமாகியதால் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழுவினரை காஷ்மீருக்கு அனுப்புவது என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இக்குழுவினர் கடந்த வாரம் காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அப்போது மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள், பிரிவினைவாத அமைப்புகள், அனைத்துத் தரப்பு மக்கள் என அனைவரிடமும் அமைதி திரும்புவதற்கு ஆலோசனை நடத்தினர்.

பின்னர் தில்லி திரும்பிய இக்குழுவினர், மத்திய அரசிடம் அறிக்கை அளித்ததைத் தொடர்ந்து சுமுகத் தீர்வு ஏற்பட 8 அம்சத் திட்டம் தயாரிக்கப்பட்டு, பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

8 அம்சத் திட்டங்கள்

  1. முக்கியஸ்தர்கள் அடங்கிய தொடர்புக் குழுவை ஏற்படுத்தி மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள், மத அமைப்புகள், மாணவர், இளைஞர் அமைப்புகள், சமூக, தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
  2. கடந்த நான்கு மாதங்களாக நடைபெற்ற வன்முறையின்போது போலீஸôர் மீது கல்லெறிதல், தீவைப்பு சம்பவங்கள் உள்ளிட்ட காரணங்களுக்காக கைது செய்யப்பட்ட இளைஞர்கள், மாணவர்கள் ஆகியோரை விடுதலை செய்ய மாநில அரசுக்கு ஆலோசனை  வழங்கப்படும். மேலும் அவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறுமாறு வலியுறுத்தப்படும்.
  3. பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிப்பது குறித்து மறுஆய்வு செய்யுமாறு மாநில அரசுக்கு யோசனை தெரிவிப்பது மற்றும் சில குறிப்பிட்ட வழக்குகளில் தடுப்புக் காவல் உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தப்படும்.
  4. மத்திய படைகளின் கூட்டத்தை உடனடியாக கூட்டுமாறு மாநில அரசைக் கேட்டுக்கொள்வது மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் குறிப்பாக ஸ்ரீநகரில் மத்திய படையினரை பணியில் ஈடுபடுத்துவது குறித்து மறுஆய்வு செய்வது, மத்திய போலீஸ் சாவடிகளின் எண்ணிக்கையை குறைப்பது, பிரச்னைக்குரிய பகுதியாக அறிவிக்கப்பட்ட உத்தரவை மறுஆய்வு செய்வது ஆகியவை குறித்து மாநில அரசுடன் பேச்சு நடத்தப்படும்.
  5. கடந்த ஜூன் 11-ம் தேதி முதல் நடந்த வன்முறையில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும்.
  6. ஜம்மு மற்றும் லடாக் பிராந்தியத்துக்கு தனித்தனியே சிறப்பு பணிக் குழுக்களை நியமித்து, வளர்ச்சிக்கான திட்டங்களை வகுப்பதுடன், அதற்கான பரிந்துரைகள் மாநில அரசுக்கு அவ்வப்போது வழங்கப்படும்.
  7. வன்முறை காரணமாக மூடப்பட்டுள்ள பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் மற்றும் இதர கல்வி நிறுவனங்களை உடனடியாக திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசை கேட்டுக்கொள்வது, தேவைப்படின் சிறப்பு வகுப்புகளை நடத்துவதற்கான நடவடிக்கை எடுப்பது, குறிப்பிட்ட காலத்தில் தேர்வுகளை நடத்தி முடிக்குமாறு மாநில அரசுக்கு வலியுறுத்தப்படும்.
  8. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் மேம்பாட்டுக்காகவும், விளையாட்டு மைதானம், நூலகம், ஆய்வகம், கலையரங்கம் உள்ளிட்ட அடிப்படை கட்டுமான பணிகளுக்காகவும் மத்திய அரசின் கூடுதல் சிறப்பு உதவியாக மாநில அரசுக்கு 100 கோடி வழங்கப்படும்.

ஓமர் அப்துல்லா வரவேற்பு:

மத்திய அரசின் 8 அம்சத் திட்டத்துக்கு ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா வரவேற்பு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் நடவடிக்கையால் மாநிலத்தில் விரைவில் அமைதி திரும்புவதுடன், அனைத்து அரசியல் பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்பட்டுவிடும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரவு: மாநிலத்தில் அமைதி திரும்புவதற்கு மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைக்கு மக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் நயீம் அக்தர் தெரிவித்தார்.

மத்திய அரசின் முயற்சி தொடக்கம் மட்டுமே. மக்களின் நம்பிக்கையைப் பெற முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

காஷ்மீர் மக்களுக்கான நடவடிக்கையாக இருக்க வேண்டும் - பாஜக: மத்திய அரசு எடுத்துள்ள முயற்சிகள் பிரிவினைவாதிகளுக்கு சாதகமாக இல்லாமல் காஷ்மீர் மக்களின் நலனுக்கு ஆதரவாக அமைய வேண்டும் என்பதே பாஜக.வின் விருப்பம் என்று அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

Dinamani