தலித் தொட்ட நாய் மீதும் தீண்டாமை!!!

26/09/2010 17:16

தீண்டாமை ஒரு பாவச் செயல்; தீண்டாமை ஒரு பெருங்குற்றம்...என்றெல்லாம் பாடப் புத்தகங்களின் முதல் பக்கத்தில் அச்சடித்து தீண்டாமைக்கு எதிரான பிரச்சாரங்களை அரசு மேற்கொண்டுதான் வருகிறது. இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் இந்த நாகரீகமற்ற செயல் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என்பதற்கான அத்தாட்சிதான் பாடப்புத்தகங்கள் வழியான பிரச்சாரம்!

மனிதனை மனிதன் இழிவுபடுத்தும் இந்தக் கொடுமையை எதிர்த்து தந்தை பெரியார் உள்பட இந்தியமுழுவதும் எத்தனையோ தலைவர்கள் நடத்திய போராட்டங்களுக்கும், பிரச்சாரங்களுக்கும் இன்னும் தேவை உள்ளது என்பது நாகரீக சமுதாயம் வெட்கி தலைகுனிய வேண்டிய விடயம்! தமிழகத்தில் இரட்டை டம்ளர், கோவிலுக்குள் நுழையவும், கோவில் தேரின் வடம் பிடிக்கும் உரிமைக்காகவும் போராட்டம், உத்தபுரத்தில் எழுப்பப்பட்ட தீண்டாமை சுவர், பாப்பாபட்டி மற்றும் கீரிப்பட்டியில் தலித் பஞ்சாயத்து தலைவரை ஏற்க மறுப்பது என பல வகையான தீண்டாமைக் கொடுமைகள் வலம் வருகின்றன என்றால், வட மாநிலங்களிலோ நிலை இதைவிட மோசம்! அங்கு நிலவும் தீண்டாமைக் கொடுமையின் சமீபத்திய கோர முகம்தான் கவுரக் கொலைகள்! தங்கள் வீட்டை சேர்ந்த ஒரு பெண்ணோ அல்லது பையனோ தலித் வகுப்பைச் சேர்ந்தவரை காதலித்து கைப்பிடித்தால், குடும்பக் கவுரம் என்ற வறட்டு சித்தாந்தத்தில் தங்கள் வீட்டுப்பிள்ளையையும் சேர்த்து கவுரவக் கொலை செய்துவிடுகிறார்கள் உயர் சாதி குடும்பத்தினர். இத்தகைய கவுரவக் கொலைகள் அதிவேகமாக அதிகரித்ததால்தான் பிரச்சனை உச்ச நீதிமன்றம் வரை சென்று, கவுரவக் கொலைகள் தடுக்க சட்டம் கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு அறிவிக்கும் அளவிற்கு நிலைமை மோசமாகிவிட்டது.

இதுபோன்ற கவுரவக் கொலைகள் வட மாநிலங்களில் நிலவும் தீண்டாமைக் கொடுமைக்கு சமீபத்திய உதாரணம் என்றால், வேறு வடிவிலான சாதிய தீண்டாமை அவலங்களும் அவ்வப்போது வெளிப்பட்டுக்கொண்டுதான் உள்ளது. அப்படி ஒரு நிகழ்வுதான் மத்திய பிரதேசத்தில் தற்போது நிகழ்ந்துள்ளது.அதுவும் இதுவரை மனிதன் மீது மட்டுமே காட்டப்பட்டு வந்த தீண்டாமை தலித் பெண் ஒருவர், ராஜ்புத் என்ற உயர் வகுப்பை சேர்ந்த ஒருவர் வளர்த்த நாய்க்கு, ஒரு ரொட்டித் துண்டைக் கொடுத்துவிட்டார் என்பதற்காக, அந்த நாயையே தீண்டாமையாக கருதி, அதனை அடித்து விரட்டியுள்ளார் அதனை வளர்த்தவர்.

மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா என்ற மாவட்டத்தில்தான் இந்த அவலம் அரங்கேறியுள்ளது. மொரேனா என்ற மாவட்டம் மாணிக்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ரம்பால் சிங். ராஜ்புத் என்ற உயர் சாதியைச் சேர்ந்த இவர் உள்ளூர் நிலச்சுவான்தார்; கூடவே அரசியல் கட்சி ஒன்றிலும் செல்வாக்கு உடையவர். இவர் ஒரு நாயை வளர்த்து வந்தார். இந்த நாய், கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் ராம்பால் சிங் வீட்டு அருகே வசித்து வந்த தலித் பெண் சுனிதா ஜாதவ் என்பவர் வீட்டிற்கு அருகே சென்றுள்ளது. அப்போது சுனிதா வயலில் வேலை செய்துவிட்டு மதிய உணவுக்காக வந்த தனது கணவருக்கு உணவு பரிமாறி உள்ளார்.அவர் உணவு பரிமாறிக்கொண்டிருப்பதை பார்த்த அந்த நாய், அவரது வீட்டிற்கு அருகிலேயே சுற்றி வளைய வந்துள்ளது.

இதனால் இரக்கப்பட்ட சுனிதா, தனது கணவருக்கு அளித்தது போக மீதமிருந்த ஒரு ரொட்டித் துண்டை அந்த நாய்க்கு போட்டுள்ளார்.

உடனே அந்த நாயும் ஆசையுடன் ஓடி வந்து அந்த ரொட்டித் துண்டை சாப்பிட்டது. அப்போது பார்த்து நாயின் எஜமானரான ராம்பால் சிங் அங்கு வந்து அதனை பார்த்துவிட்டார். உடனே ஆகாசத்திற்கும், பூமிக்குமாக எகிறி குதித்த அவர், " எனது நாய்க்கு எப்படி நீ ரொட்டித் துண்டு போடலாம்?" எனக் கேட்டு சுனிதாவை மிகவும் அவதூறாக பேசி கடுமையாக சத்தம் போட்டுவிட்டுச் சென்றுள்ளார்.

சரி... பிரச்சனை அத்தோடு முடிந்தது என சுனிதா நினைத்திருக்க, விடவில்லை ராம்பால் சிங்! தலித்திடம் ரொட்டி வாங்கித் தின்ற அந்த நாய் தீண்டத்தகாதது என்று கூறி,அதனை வீட்டை விட்டு வெளியேற்றிய அவர், அதனை கிராமத்தின் விளக்கு கம்பம் ஒன்றில் கட்டிப்போட்டுவிட்டு பஞ்சாயத்தைக் கூட்டிவிட்டார்.

பஞ்சாயத்துக்கு சுனிதாவும் வரவழைக்கப்பட்டார்.இறுதியில் அந்த நாய் தீண்டத்தகாதாகி விட்டதால், அது சுனிதாவின் வீட்டில்தான் வளர வேண்டும் என்றும் தீர்ப்பானது. மேலும் சுனிதாவுக்கு 15,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சுனிதாவும், அவரது சகோதரர் நாகர் சிங்கும், "நாய்க்கு ரொட்டி கொடுத்தது குற்றமா...?" என்று புலம்பியபடியே அருகிலுள்ள சுமாவாலி காவல் நிலையத்தில் சென்று இது குறித்து புகார் அளித்துள்ளனர். அங்கிருந்த காவலர்கள், இது குறித்து அருகில் இருக்கும் கல்யாண் காவல் நிலையத்தில் உள்ள எஸ்சி/எஸ்டி வன்கொடுமைக் குற்றப்பிரிவினரிடம் சென்று புகார் அளிக்குமாறு விரட்டியுள்ளனர்.

அங்கு சென்று சுனிதா முறையிட்டபோது, " நீ ஏன் உயர்சாதியை சேர்ந்தவர் வளர்க்கும் நாய்க்கு ரொட்டி கொடுத்தாய்?"  என்று கேட்டுள்ளார் அங்கிருந்த அதிகாரி! இதனால் மேலும் நொந்துபோன சுனிதா, எஸ்சி/எஸ்டி வன்கொடுமைக் குற்றப்பிரிவின் டிஎஸ்பி-யிடம் சென்று புகார் மனு அளித்துள்ளார்.கூடவே மாவட்ட ஆட்சியருக்கும் மனு அளித்துள்ளார்.

ஆனால் இதுவரை முதல் தகவல் அறிக்கை ( FIR ) கூட பதிவாகவில்லை.விசாரித்துக் கொண்டிருக்கிறோம் என்று வழக்கம்போல் சொல்லிக் கொண்டிருக்கிறார்களாம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள்!

Webdunia