ஸ்பெக்ட்ரம்: பா.ஜ. ஆட்சியில் நடந்தது குறித்தும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

10/12/2010 14:10

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக முந்தைய பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் பின்பற்றிய கொள்கைகள் குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பின்பற்றிய கொள்கையையே தாமும் பின்பற்றியதாக கூறி தமது நிலையை இன்னமும் நியாயப்படுத்தி வருகிறார் முன்னாள் மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சரான ஆ.ராசா.

இந்நிலையில்,2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு, இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கின் விசாரணை முன்னேற்ற விவரங்களை சிபிஐ-யிடம் கேட்ட நீதிபதிகள், ஸ்பெக்ட்ரம் ஊழல் 1.76 லட்சம் கோடி ரூபாயோடு மட்டும் இருக்கப்போவதில்லை. அதற்கும் மேலாக விரிவடைந்து செல்வதாக குறிப்பிட்டனர்.

மேலும் இந்த விசாரணையை ஒருதலைபட்சமாக ஆக்க தாங்கள் விரும்பவில்லை என்றும், எனவே 2001 - 2002 ஆம் ஆண்டில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பின்பற்றிய முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற கொள்கை குறித்தும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி மற்றும் ஏ.கே. கங்குலி ஆகியோர் உத்தரவிட்டனர். webdunia.com