''10வது இடம் பெற்றும் இந்திய யூனியன் முஸ்லீக் பெயரை தேர்தல் ஆணையம் ஏன் வெளியிடவில்லை?''

25/10/2011 11:38

உள்ளாட்சித் தேர்தலில் 10வது இடம் பெற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரை தேர்தல் ஆணையம் ஏன் வெளியிடவில்லை என்று அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் கேள்வி எழுப்பியுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

உள்ளாட்சி தேர்தலில் இந்திய யுனியன் முஸ்லிம் லீக் சார்பில் 394 இடங்களில் தனி சின்னத்தில் போட்டியிட்டு 119 இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். கட்சி ரீதியாக நடந்த தேர்தலில் 20 நகராட்சி கவுன்சிலர்கள், 4 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், 17 பேரூராட்சிகள் என 41 பேர் வெற்றி பெற்றுள்ளார்கள். இதற்காக வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

41 இடங்களில் வெற்றி பெற்றிருப்பதால் வெற்றி பெற்ற கட்சிகளின் வரிசையில் இந்திய யுனியன் முஸ்லிம் லீக்கிற்கு 10-வது இடம் கிடைத்துள்ளது. ஆனால் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பட்டியலில் எங்கள் கட்சி இடம்பெறவில்லை. 35 இடங்களை பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள், 14 இடங்களை பெற்றுள்ள புதிய தமிழகம், 11 இடங்களை பெற்றுள்ள ராஷ்டிரீய ஜனதா தளம், ஒரு இடத்தை பெற்றுள்ள அகில இந்திய பார்வர்டு பிளாக், ஐ.ஜே.கே., ஆர்.எஸ்.பி. ஆகிய கட்சிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இந்திய யுனியன் முஸ்லிம் லீக் கட்சியினருக்கு இது பெரும் வேதனையாக உள்ளது. எங்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும் இது பெரும் அநீதியாக தெரிகிறது.

இந்த குறைபாடு பற்றி தமிழக தேர்தல் ஆணையத்திடம் முறையிடுவோம். நியாயம் கேட்போம். அந்த உரிமையை மாநில தேர்தல் ஆணையம் நிச்சயம் வழங்கும் என்று நம்புகிறோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

THATSTAMIL.COM