அஜ்மீர் குண்டு வெடிப்பு விவகாரத்தில் RSS தலைவரைக் காப்பாற்ற ராஜஸ்தான் அரசு முயற்சி

04/11/2010 13:01

 

ஆஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி இந்திரேஷ் குமாரை கைது செய்வது தொடர்பாக, முன்னுக்குப்பின் முரணான தகவல்களை ராஜஸ்தான் மாநில அரசு தெரிவித்து வருகிறது என்று மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் உமா சங்கர் குப்தா தெரிவித்தார்.

 

ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீரில் கடந்த 2007-ம் ஆண்டு அக்டோபர் 11-ம் தேதி சூஃபி வழிபாட்டுத் தலத்தில் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். 17 பேர் காயமடைந்தனர்.

 

இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக இந்திரேஷ் குமார் மீது ராஜஸ்தான் பயங்கரவாத தடுப்புப் படை அண்மையில் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்தது.

 

இந்நிலையில், அவர் கைது தொடர்பாக அசோக் கெலாட் தலைமையிலான ராஜஸ்தான் மாநில அரசு தொடர்ந்து முரணான தகவல்களை தெரிவித்து வருவதாக, உமா சங்கர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை தெரிவித்தார்.

 

முதலில், இந்த விசாரணை தொடர்பாக மத்தியப் பிரதேச அரசு எந்தவித ஒத்துழைப்பும் அளிக்கவில்லை என ராஜஸ்தான் அரசு தெரிவித்தது. பின்னர், மத்தியப் பிரதேச அரசிடம் இருந்து தகவல்களை பெற்றதாக தெரிவித்தது. இந்த இரண்டிலுமே உண்மையில்லை.

 

இதுபோன்ற பொய்களை சொல்வதற்கு முன்னர் ராஜஸ்தான் அரசு நன்கு யோசித்து சொன்னால் நல்லதாக இருக்கும் என குறிப்பிட்டார் உமா சங்கர்.

 

தினமணி