அடுத்த வருடத்திற்குள் ஆப்கானிலுள்ள துருப்புகளை வாபஸ்பெற பிரிட்டன் திட்டம்

09/12/2010 13:25

 

ஆப்கானிஸ்தானிலுள்ள பிரிட்டிஷ் படைகளை அடுத்த வருடத்திற்குள் வாபஸ் பெறப்போவதாக பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.ஆப்கானிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள டேவிட் கமரூன் அங்கு இராணுவ வீரர்கள் மற்றும் பொலிஸாருக்கு பயிற்சியளித்தல் மற்றும் தலிபான்களுக்கு எதிரான நடவடிக்கைகள் என்பனவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பிரிட்டிஷ் வீரர்களை வாபஸ் பெறுவது தொடர்பாக தம்மை சாத்திய நிலைக்கு இட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில் பிரிட்டிஷ் படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து 2015 ஆம் ஆண்டளில் வாபஸ் பெறுவது தொடர்பாக கடந்த மாதம் பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கமரூன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

மேலும் தனக்கு முன்னர் பிரதமர் பதவியிலிருந்தவர்களைப்போல் கமரூனும் கிறிஸ்மஸ் தினத்திற்கு முன்னர் ஆப்கானிஸ்தானிலுள்ள பிரிட்டிஷ் படைவீரர்களுக்கு நன்றிகூறும் முகமாக அங்கு சென்றிருப்பதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

 

அத்துடன், தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களிலுள்ள படைவீரர்களையும் சந்தித்ததுடன் ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்தில் கொல்லப்பட்ட பிரிட்டிஷ் படைவீரருக்கும் கமரூன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

 

மேலும் கடந்த ஞாயிறன்று இடம்பெற்ற நட்புரீதியான துப்பாக்கிப் பிரயோகத்தில் குறித்த படைவீரர் கொல்லப்பட்டதுடன் அது தொடர்பாக புலன்விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

ஆப்கான் சென்ற கமரூன் அங்குள்ள பிரிட்டனின் பிரதான படைத்தளமான பஸ்ஸனில் ஓரிரவு தங்கியிருந்ததுடன் தலிபான்களுக்கெதிரான படைவீரர்களின் நடவடிக்கைகள் குறித்து பெருமிதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

மேலும் அடுத்த வருட முற்பகுதியில் ஆப்கானிலுள்ள பிரிட்டிஷ் துருப்புகளை வாபஸ் பெறும் நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பாக கமரூன் அதே நம்பிக்கையுடன் இருப்பதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.பி.பி.சி.

thinakkural.com