அண்டார்டிகா தென் துருவ ஆய்வில் சவூதி பெண்மணி

14/12/2011 15:54

சாஹர் அல் ஷம்ரானி என்னும் சவூதி கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் அண்டார்டிகா தென் துருவ ஆய்வுக்காக பயணிக்க உள்ளார். சவூதியிலிருந்து இவ்வாய்வில் ஈடுபடும் முதல் பெண்மணியாவார் இவர்.

தனது அண்டார்டிகா துருவப் பயணத்தின் நோக்கம் பூகோளத்தைப் பாதிக்கும் சூழலியல் அம்சங்களுக்கு மாற்றுத் திட்டங்களை ஆய்வதே என்று சாஹர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சூழலியல் நிபுணர்கள், விஞ்ஞானிகளும், குறிப்பாக பிரித்தானிய விஞ்ஞானி ராபர்ட் ஸ்வான் ஆகியோரும் சாஹர் உடன் பயணிக்க உள்ளனர்.

சவூதி பெண்கள் அனைத்துத் துறைகளிலும் பங்களிக்க முன்வரவேண்டும் என்ற மன்னர் அப்துல்லாஹ்வின் ஊக்கமூட்டும் கருத்துகள் தன்னை இத்துறையில் ஈடுபடத் தூண்டியது என்றார் சாஹர். சுற்றுப்புற சூழலியல் காரணிகளால் புவிக்கோளம் அடையும் பாதிப்புகள் குறித்து தான் மிகவும் கவனம் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்

தன து பயண ஏற்பாட்டிற்காக, உணவுக்கட்டுப்பாடு, மற்றும் மருத்துவக் கண்காணிப்பில் உடற்பயிற்சி, சோதனைகளையும் சாஹர் மேற்கொண்டு வருகிறார். சாஹருடன் இவ்வாய்வில் முன் அனுபவமுள்ள துபாய் பெண்ணொருவரும் உடன் செல்கிறார்,

துபாயிலிருந்து தொடங்கும் இந்த 17 நாள் பயணம், சான் பவுலோவுக்கும் பின்னர் புய்னேஸ் அயர்ஸ்சுக்கும் செல்லும். அங்கிருந்து நீர்த்தடத்தில் பயணம் தொடரும் என்றும் சாஹர் சொன்னார்.

inneram.com