அதிக எண்ணிக்கையில் ஹஜ் பயணிகள் - ஜெயலலிதா வேண்டுகோள்

16/07/2012 10:30

இந்த ஆண்டு தமிழகத்திலிருந்து ஹஜ் கமிட்டி மூலமாக பயணம் செய்பவர்களுக்கு அதிக எண்ணிக்கையில் இடம் ஒதுக்கும்படி பிரதமர் மன்மோகன்சிங்கை தமிழக முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார். 

நேற்று முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

 

தனது கடிதத்தில் ஜெயலலிதா தெரிவித்திருப்பதாவது:

இந்த ஆண்டு, ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள விருப்பம் தெரிவித்து 12,100 பேர் தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டியிடம் மனு கொடுத்துள்ளனர். மும்பையில் உள்ள இந்திய ஹஜ் கமிட்டி, தமிழகத்துக்கு 2,863 இருக்கைகள் மட்டுமே ஒதுக்கீடு செய்திருப்பது போதுமானதாக இல்லை. இது வருத்தமளிக்கிறது. தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட 2,863 இருக்கையில் 1,146 இருக்கைகள் ரிசர்வ் பிரிவிலும், 1,717 இருக்கைகள் பொது பிரிவுக்குமானது. மீதி 9,243 மனுதாரர்கள் நிராகரிக்கப்படுகின்றனர்.

 

கடந்த ஆண்டு 10 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டது. இதில் 3,049 இருக்கைகள் ஒதுக்கப்பட்டன. மேலும் அரசின் வரையறைக்கு உட்பட்டு கூடுதலாக இருக்கைகள் ஒதுக்கப்பட்டு மொத்தம் 4,084 பேர் 2011,ம் ஆண்டு ஹஜ் புனித பயணம் மேற்கொண்டனர். இந்த ஆண்டு 2,863 இருக்கைகள்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. இது மிக குறைவானதாகும். எனவே, தாங்கள் இந்த விதயத்தில் தலையிட்டு, தமிழகத்தில் இருந்து பெறப்பட்டுள்ள மனுக்களின் எண்ணிக்கை கணக்கில் கொண்டு ஒதுக்கீட்டை அதிகரிக்க செய்ய வேண்டும். மத்திய அரசின் வெளிவிவகாரத்துறை அமைச்சகம், போதுமான கூடுதல் எண்ணிக்கையை விடுவிக்க வேண்டும். இதன் மூலம் அதிக அளவில் ஹஜ் புனித பயணம் மேற்கொள்பவர்கள் பயன்பெறுவர்"

 

இவ்வாறு ஜெயலலிதா பிரதமருக்கு தனது கடிதத்தில்   கோரிக்கை விடுத்துள்ளார்.


Read more about அதிக எண்ணிக்கையில் ஹஜ் பயணிகள் - ஜெயலலிதா வேண்டுகோள் [5272] | தமிழக செய்திகள் | செய்திகள் at www.inneram.com