அதிபர் ஒபாமா வருகைக்கு எதிர்ப்பு: நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்-இடதுசாரிகள்

30/10/2010 19:55

(டிஎன்எஸ்) ஒபாமாவின் இந்திய வருகைக்கு இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. நவ.8ஆம் தேதி, நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அந்த கட்சிகள் அறிவித்து உள்ளன.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா நான்கு நாள் சுற்றுப்பயணமாக நவ.6ஆம் தேதி இந்தியா வருகிறார். அவருடன் அவர் மனைவி மிச்செலும் வருகிறார்.

மும்பையில் தங்கும் அவர், மறுநாள் 7ஆம்- தேதி ஒரு பள்ளிக்கூடத்தில் இந்திய சிறுவர்-சிறுமிகளுடன் தீபாவளி கொண்டாடுகிறார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவர், 8ஆம் தேதி நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

இந்த நிலையில், ஒபாமாவின் வருகைக்கு இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

அவரது வருகைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நாடாளுமன்றத்தின் கூட்டு கூட்டத்தில் அவர் உரையாற்றும் நவ.8ஆம் தேதி, நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அந்த கட்சிகள் அறிவித்து உள்ளன.

இது பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, பார்வர்டு பிளாக் ஆகிய இடதுசாரி கட்சிகள் கூட்டாக அறிக்கை விடுத்துள்ளன. அந்த கூட்டறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அமெரிக்காவின் முதலாவது ஆப்பிரிக்க - அமெரிக்க ஜனாதிபதியான ஒபாமா இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
 
புதிய கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த புஷ் ஆட்சிக்கு பிறகு ஜனாதிபதியாக பதவி ஏற்ற அவரிடம் ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் நிறைய இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அந்த மாற்றங்கள் ஏற்படவில்லை.

அமெரிக்கா பின்பற்றும் கொள்கைகள் பல நாடுகளின் இறையாண்மைக்கும், மக்களுக்கும் விரோதமாக உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில், அதனுடைய பொருளாதார கொள்கைகளை பின்பற்றும்படி இந்தியாவை நெருக்கடி கொடுத்து வருகிறது. அவை இந்திய மக்களுக்கு பெரும் தீங்கு விளைவிக்கக்கூடியவை, பாதிப்பை உண்டாக்கக்கூடியவை.

ஆகவே, அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வருகிற 8ஆம் தேதி நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்து உள்ளோம்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, போபால் விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கு. இந்தியாவின் வெளிநாட்டு கொள்கைகளில் தலையிட்டு, அமெரிக்காவின் கொள்கைகளை திணிப்பதை உடனடியாக நிறுத்து.

அமெரிக்கா - இந்தியா பாதுகாப்பு ஒப்பந்தத்தை ரத்து செய். ஈராக்கில் மீதம் உள்ள 50 ஆயிரம் படைகளை உடனடியாக திரும்பப்பெறு. கியூபா மீதான தடையை நீக்கு ஆகிய கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது எழுப்பப்படும்.

இவ்வாறு அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (டிஎன்எஸ்)

chennaionline.com