அதிபர் ஒபாமாவை முஸ்லீமாக கருதும் அமெரிக்கர்கள்-கருத்துக் கணிப்பால் சர்ச்சை

22/08/2010 09:38

நான்கு அமெரிக்கர்களில் ஒருவர், அதிபர் பாரக் ஒபாமா ஒரு முஸ்லீம் என கருதுகிறராம். இதையடுத்து ஒபாமா ஒரு சுத்தமான கிறிஸ்தவர் என வெள்ளை மாளிகை அவசரம் அவசரமாக விளக்கம் அளித்துள்ளது. மேலும், அதிபர் எந்த நம்பிக்கையைச் சார்ந்தவர் என்பது விவாதத்துக்குரிய விஷயமல்ல என்றும் அது கண்டித்துள்ளது.

Obamaஒபாமாவின் முழுப் பெயர் பராக் ஹூசேன் ஒபாமா. இருப்பினும் அவர் ஒரு கிறிஸ்தவர். இருப்பினும் ஒபாமாவின் சமீபத்திய செயல்பாடுகளால் அவரை ஒரு முஸ்லீம் என பெரும்பாலான அமெரிக்கர்கள் கருதுவதாக பியூ ரிசர்ச் சென்டர் நடத்திய ஆய்வு கூறியுள்ளது.

அதிபராகப் பதவியேற்ற பின்னர் இஸ்லாமிய நாடுகளுடன் அமெரிக்கா புது உறவை ஏற்படுத்த பாடுபடப் போவதாக ஒபாமா அறிவித்தார். இது அமெரிக்கர்களிடையே புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. பின்னர் சமீபத்தில், நியூயார்க் இரட்டை கோபுரம் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்ட இடத்தில், மசூதி கட்ட அவர் ஆதரவு தெரிவித்தார்.

இதையடுத்து அவர் ஒரு முஸ்லீம் என்ற கருத்து அமெரிக்கர்களிடையே வேகமாக பரவி வருவதாக அந்தக் கருத்துக் கணிப்பு கூறியுள்ளது.

கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 18 சதவீதம் பேர் ஒபாமா ஒரு முஸ்லீம் என தெரிவித்துள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு டைம்ஸ் இதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் ஒபாமா முஸ்லீம் என 24 சதவீதம் பேர் கருத்து தெரிவித்திருந்தனர் என்பது நினைவிருக்கலாம்.

34 சதவீதம் பேர் ஒபாமா ஒரு கிறிஸ்தவர் என தெரிவித்துள்ளனர். இது கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் 48 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நான்கில் ஒரு அமெரிக்கர், ஒபாமாவை முஸ்லீம் என கருதுவதாகவும் இந்தக் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

கிறிஸ்தவர்தான்-வெள்ளை மாளிகை விளக்கம்:

இந்தக் கருத்துக் கணிப்பு அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து வெள்ளை மாளிகை விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,

அதில், அதிபர் ஒபாமா கிறிஸ்தவர். அவர் தினமும் பிரார்த்தனை செய்கிறார். கிறிஸ்தவ பாஸ்டர்களிடம் இருந்து ஆலோசனைகளையும் கேட்டு வருகிறார்.அவர் எந்த விதமான மதக் கொள்கையை பின்பற்றுகிறார் என்பது பொதுமக்கள் விவாதத்துக்கும், கருத்து கணிப்புக்கும் எடுத்துக் கொள்ளக் கூடிய விஷயம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது