அன்னிய நேரடி முதலீடு நடப்பாண்டில் 18.3 சதவீதம் சரிவு

04/09/2010 11:06

இந்தியாவில் நேரடி அன்னிய முதலீடு நடப்பாண்டில் 18.3 சதவீதம் சரிந்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையான காலத்தில் அன்னிய நேரடி முதலீடு 1,077 கோடி டாலராகும்.

 

கடந்த ஆண்டு இதே காலத்தில் நேரடி முதலீடு 1,319 கோடி டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் காணப்பட்ட பொருளாதார மந்த நிலையே சரிவுக்கு முக்கியக் காரணம் என மத்திய தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேற்கத்திய நாடுகளில் பொருளாதாரம் மீட்சியடையும்போதுதான் இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு அதிகரிக்கும் என்று வெளிநாடு வர்த்தகத்துக்கான இந்திய மையத்தைச் சேர்ந்த நிபுணர் ராகேஷ் மோகன் ஜோஷி தெரிவித்தார்.

 

பொதுவாக அன்னிய முதலீடுகள் சேவைத் துறை, தொலைத் தொடர்புத் துறை, கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் அதிகம் இருக்கும். மோரீஷஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், நெதர்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள்தான் அதிக அளவில் இந்தியாவில் முதலீடு செய்கின்றன.

 

அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதற்கு எளிய கொள்கைகளை இந்தியா வகுத்து வருகிறது. தவிர, சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிப்பது தொடர்பாக பொதுமக்களிடமிருந்து கருத்துகள் கேட்கப்பட்டு வருகின்றன.

 

2009-10-ம் நிதி ஆண்டில் இந்தியாவில் நேரடி அன்னிய முதலீடு 2,588 கோடி டாலராகும். இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 5 சதவீதம் குறைவாகும். 2008-09-ம் ஆண்டில் இந்தியாவில் நேரடி அன்னிய முதலீடு 2,733 கோடி டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Dinamani