அபாயத்தில் வழுதூர் மின் உற்பத்தி நிலையம் : கோடிகளை கொட்டியும் பயன் இல்லை

02/06/2011 15:11

கோடிகளை கொட்டி அமைக்கப்பட்ட வழுதூர் 2வது யூனிட் செயல்படாததால், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் வழுதூரில் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் இயற்கை எரிவாயு சுழலி மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் இரண்டு யூனிட்டுகள் உள்ளன. முதல் யூனிட் "பெல்' நிறுவனத்தால் 300 கோடி ரூபாய் செலவில் 2003ல் அமைக்கப்பட்டது. இந்த யூனிட் மூலம் மானாமதுரை, காவனூர், காரைக்குடி, சிவகங்கை பகுதிகள் மின் வசதி பெறுகின்றன.

 

மின் உற்பத்தியை அதிகரிக்க வழுதூரில் 2வது யூனிட் அமைப்பதற்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு டெண்டர் விட்டது. இந்த பணியை "பெல்' நிறுவனம் 400 கோடிக்கு டெண்டர் எடுத்திருந்தது. இதையடுத்து 2006ல் ஆட்சிக்கு வந்த அரசு, பழைய டெண்டரை ரத்து செய்து, புதிய டெண்டர் விட்டது. இந்த பணியை சென்னை பி.ஜி.ஆர். நிறுவனம் 355 கோடிக்கு டெண்டர் எடுத்தது. சோதனை ஓட்டமாக 2008ல் உற்பத்தியை தொடங்கியது. தினமும் 92.2 மெகாவாட் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆர்.எஸ்.மடை, மண்டபம், திருவாடானை ஆகிய இடங்களுக்கு மின்சப்ளை கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டது. ஆரம்பித்திலிருந்தே முழு உற்பத்தியை எட்டவில்லை.

 

அதன் பாகங்கள் பழுதாகி உற்பத்தி நின்றது. இதை சரி செய்ய வேண்டிய பி.ஜி.ஆர். நிறுவனம், இத்தாலியிருந்து இதை தயாரித்த "அன்சால்டா' கம்பெனி குழுவினர் வரவேண்டும் என்று கையை விரித்து விட்டது. தற்போது 70 கோடி ரூபாயில் பழுது பார்க்கும் பணி நடக்கிறது. "கம்ப்ரசர்' பழுதானததால், முதல் யூனிட்டில் ஸ்பேராக இருந்த "கம்ப்ரசர்' மூலம் இரண்டாவது யூனிட் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

 

இதனால் முதல் யூனிட்டில் "கம்ப்ரசர்' பழுதானால் அதற்கு "ஸ்பேர்' இல்லாத நிலை உள்ளது. இரண்டாவது யூனிட்டில் தற்போது 25 மெகாவாட் மின் உற்பத்திக்கு மேலே சென்றால் அதிர்வுகள் ஏற்படுகின்றன. இதை தடுக்க கூடுதல் "வெயிட்' கொடுக்கப்பட்டாலும், 50 மெகாவாட்டுக்கு மேலே உற்பத்தி செய்ய முடியாத சூழல் உள்ளது. தமிழகத்தின் மின் தேவை அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில் கோடிகளை கொட்டி தயாரிக்கப்பட்ட யூனிட், மூடப்படும் அபாயத்தில் உள்ளது.
dinamalar.com