அமீத் ஷா மீது மேலும் ஒரு கொலை வழக்கு: விசாரிக்க அனுமதி கோருகிறது சிபிஐ

05/12/2010 09:18

கொலை வழக்கு ஒன்றில் குஜராத் முன்னாள் அமைச்சர் அமீத் ஷாவுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.

 

 

ஏற்கெனவே அவர் மீதான சொராபுதீன் ஷேக் போலி என்கவுன்ட்டர் வழக்கு விசாரணையின் இறுதி அறிக்கையை சமீபத்தில் நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது. இந்நிலையில் இந்த வழக்கின் முக்கிய சாட்சியான துளசிராம் பிரஜாபதி என்கவுன்ட்டர் வழக்கில் அமீத் ஷாவுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ கோரிக்கை விடுத்துள்ளது.

 

 

குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவர், அம்மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அமீத் ஷா. இவரது உத்தரவின் பேரில்தான் சொராபுதீன் ஷேக், போலீஸôரால் போலி என்கவுன்ட்டர் நடத்தி கொல்லப்பட்டார் என்று சிபிஐ வழக்குத் தொடர்ந்தது.

 

 

இது தொடர்பாக அமீத் ஷா, கைது செய்யப்பட்டார். இதன் காரணமாக அமைச்சர் பதவியையும் அவர் ராஜிநாமா செய்தார்.

 

இந்நிலையில் 2006-ம் ஆண்டில் துளசிராம் பிரஜாபதி என்பவர் போலீஸாரால் என்கவுன்ட்டர் மூலம் கொல்லப்பட்டார். இவர் சொராபுதீன் ஷேக் என்கவுன்ட்டர் வழக்கில் முக்கிய சாட்சி. இதன் காரணமாகத்தான் அவர் கொல்லப்பட்டுள்ளார்.

 

 

இந்த கொலை தொடர்பாக அப்போது அமைச்சராக இருந்த அமீத் ஷா, போலீஸ் அதிகாரி ராஜ்குமார் பாண்டியனுடன் (இவர் இப்போது சொராபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கில் சிறையில் உள்ளார்) தொலைபேசியில் பேசியுள்ளார். இருவருக்கும் இடையே துளசிராம் கொலைக்கு முந்தைய, பிந்தைய சில நாள்களில் 13 தொலைபேசி உரையாடல்கள் நிகழ்ந்துள்ளன. இதன் மூலம் துளசிராம் போலி என்கவுன்ட்டரிலும் அமீத் ஷாவுக்கு தொடர்பு உள்ளது உறுதியாகிறது.

 

 

எனவே, துளசிராம் போலி என்கவுன்ட்டர் வழக்கையும் சிபிஐ-க்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமென்று சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

 

ஏற்கெனவே சொராபுதீன் கொலை வழக்கில் சிக்கியுள்ள நிலையில், இப்போது மேலும் ஒரு கொலை வழக்கில் அமீத் ஷா சிக்கியுள்ளார்.

dinamani.com