அமெரிக்க பயங்கரவாதிகளால் அமெரிக்காவுக்கு புது தலைவலி விக்கி-லீக்ஸ்

27/08/2010 15:32

டேவிட் ஹெட்லி போன்ற அமெரிக்கக் குடிமக்களான பயங்கரவாதிகளால் அமெரிக்காவுக்கு புதிய தலைவலி ஏற்பட்டிருக்கிறது. பயங்கரவாதத்தை முறியடிப்பதில் அமெரிக்கா இரட்டை வேடம் போடுகிறது என்று பிற நாடுகள் சந்தேகப்படும் வாய்ப்பை இந்தப் பயங்கரவாதிகள் ஏற்படுத்தி வருகின்றனர்.

அத்துடன், பயங்கரவாதத்தைஅமெரிக்கா கண்டிப்பதும், பயங்கரவாதத்தை வேரோடு சாய்க்கப் புறப்பட்டுவிட்டதாகக் கூறுவதும் வெறும் மாய்மாலம், நாடகம் என்றே பிற நாடுகள் நினைக்க வழி ஏற்படுத்தியிருக்கிறது என்று விக்கி-லீக்ஸ் என்ற இணையதளம் தெரிவிக்கிறது.

அமெரிக்காவில் நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் அதன் பின்னணியில் இருப்பது சி.ஐ.ஏ. என்று அழைக்கப்படும் அதன் உளவு அமைப்புதான்.

பாகிஸ்தானில் எது நடந்தாலும் எப்படி ஐ.எஸ்.ஐ.யின் பங்கு அதில் இருக்குமோ அப்படியே அமெரிக்காவில் எது நடந்தாலும் அது சி.ஐ.ஏ.வுக்குத் தெரிந்தே நடக்கிறது என்ற எண்ணம் உலகம் முழுக்க ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவரும் பாகிஸ்தானில் பிறந்து அமெரிக்கக் குடியுரிமை பெற்றவருமான டேவிட் ஹெட்லி போன்றவர்களை அமெரிக்க குடியுரிமைச் சட்டப்படி பிற நாடுகள் கைது செய்யவோ, விசாரிக்கவோ அமெரிக்கா அனுமதிப்பதில்லை. தாவூத் கிலானி என்ற இயற் பெயரைக் கொண்ட டேவிட் ஹெட்லி அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் தன்னை யூத கிறிஸ்தவர் என்றே மற்றவர்கள் நினைக்க வேண்டும் என்று டேவிட் ஹெட்லி என்று பெயரை மாற்றிக்கொண்டார்.

மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு சூத்திரதாரியாகச் செயல்பட்டார். அமெரிக்காவில் கைதானவுடன் அமெரிக்காவின் மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகள் அவரிடம் விசாரணை செய்தபோதுதான் அவர் எப்பேர்ப்பட்ட சர்வதேச பயங்கரவாதி என்று தெரியவந்தது.

அப்படியிருந்தும் அவரை இந்தியாவுக்கு அழைத்துவந்து விசாரிக்க இந்திய அரசு அனுமதி கோரியபோது, இங்கேயே வந்து விசாரித்துக் கொள்ளுங்கள் என்று மட்டும் அமெரிக்கா அனுமதி தந்தது.

இந்த நிலை நீடித்தால் உலகின் பிற நாடுகள் அமெரிக்கா மீது நம்பிக்கை இழந்துவிடும், பயங்கரவாதிகள் விஷயத்தில அமெரிக்கா சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்று அவர்கள் முடிவு கட்டிவிடக்கூடும் என்று சி.ஐ.ஏ.வே அஞ்சுகிறது.

அமெரிக்காவுக்கு எதிராக சதி செய்தவர்கள், பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் எந்த நாட்டவராக இருந்தாலும் அவர்களைக் கைது செய்து தங்கள் நாட்டுக்கு அழைத்து வந்து விசாரிப்பது தங்களுடைய உரிமை, கடமை என்று அமெரிக்கா கருதுகிறது.

அதே போல தன்னுடைய நாட்டைச் சேர்ந்தவர் பிற நாட்டுக்கு எதிராக சதி செய்திருந்தாலோ, செயல்பட்டிருந்தாலோ அவரைக் கைது செய்து அந்த நாட்டிடம் ஒப்படைப்பது தனது கடமை என்று அது கருதுவதில்லை; மாறாக, அப்படிப்பட்டவரைக் கைது செய்து சித்திரவதை செய்துவிடக்கூடாது, தூக்கில் போட்டுவிடக்கூடாது என்று நிபந்தனைகளை விதிக்கிறது.

சாதாரண குற்றங்களுக்கு வேண்டுமானால் அமெரிக்கா கருதுவது சரியாக இருக்கலாம்.

மும்பை மீதான தாக்குதல் போன்றவற்றில் திட்டமிட்டு ஈடுபட்ட சதிகாரர்களுக்கு மனித உரிமைகளை உத்தரவாதப்படுத்துவது எந்த வகையில் நியாயம் என்றே சர்வதேச அரங்கில் கேட்கத் தொடங்கிவிட்டனர்.

2001-ம் ஆண்டு அமெரிக்காவில் செப்டம்பர் 11-ம் தேதி நடந்த மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் அப்துல் கனி மஜெüதி என்பவரை அமெரிக்கப் புலனாய்வுப் போலீஸôர் கைது செய்தனர்.

அவர் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர். அவர் மீதான சதி திட்ட வழக்கு ஜெர்மனி நாட்டிலும் ஒன்று நடந்தது.

அப்போது அந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க மஜெüதியை அனுப்புமாறு ஜெர்மனி அரசு கோரியது. அதை அமெரிக்கா நிராகரித்தது.

குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும் மஜெüதியை விசாரிக்கும் வாய்ப்பை அமெரிக்கா மறுத்துவிட்டதால் அவர் மீதான குற்றச்சாட்டு தள்ளுபடி செய்யப்பட்டு அவரை வழக்கிலிருந்து விடுவிக்கிறோம் என்று ஜெர்மானிய நீதிமன்றம் 2005ல் தீர்ப்பு வழங்கியது.

இனி இதுதான் பிற நாடுகளிலும் நடக்கும் என்று அமெரிக்க அரசும் சி.ஐ.ஏ. அமைப்பும் இப்போது அஞ்சுவதாக விக்கி-லீக்ஸ் தெரிவிக்கிறது.