அமெரிக்க முதியவர்களில் 48 % பேச்சிலர் ஆய்வில் தகவல்

08/12/2010 09:28

அமெரிக்காவில் வசிக்கும் முதியவர்களில் திருமணம் ஆகாதவர்கள் 48 சதவீதம் என ஆய்வு முடிவு கூறுகிறது. திருமணம் செய்து கொள்வதற்கு பணவசதி மிகவும் அவசியம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

nakkheeran.in

பியூ ஆராய்ச்சி மையம் டைம் இதழுடன் இணைந்து, அமெரிக்கர்களின் திருமணம் பற்றி விரிவான ஆய்வை மேற்கொண்டது. இதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்காவில் திருமணமான தம்பதிகள் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 1960ம் ஆண்டில் 72 சதவீத முதியவர்கள் திருமணம் செய்தவர்களாக இருந்தனர். இது 2008ல் 52 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும், திருமணம் செய்துகொள்ளும் வழக்கம் படிப்படியாக மறைந்து வருவதாக 40 சதவீம் பேர் தெரிவித்துள்ளனர். 1978ல் ஆண்டில் இது 29 சதவீதமாக இருந்தது.

 

 

திருமணமாகாத ஒரு பெண், குழந்தைகளுடன் வசிப்பது சமுதாயத்தில் இழிவாக கருதப்படுவதாக 69 சதவீதம் பேர் தெரிவித்தனர். குழந்தைகள் சந்தோஷமாக வளர அம்மாவும் அப்பாவும் உடன் இருப்பது அவசியம் என்பது 61 சதவீதம் பேரின் கருத்து.
 

 

 


1960ம் ஆண்டில் திருமணமானவர்களில், பள்ளிப் படிப்பு மட்டும் முடித்தவர்களுக்கும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கும் இடையிலான இடைவெளி 4 சதவீதமாக இருந்தது.

இது 2008ம் ஆண்டில் 16 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதாவது பட்டப்படிப்பு முடித்தவர்களில் 64 சதவீதம் பேர் திருமணம் செய்து கொண்ட நிலையில், பள்ளிப் படிப்பு வரை படித்தவர்கள் 48 சதவீதம் பேர் மட்டுமே திருமணம் செய்து கொண்டனர்.


குறைவாக படித்தவர்களில் 38 சதவீதம் பேர் திருமணம் செய்து கொள்வதற்கு பணவசதி மிகவும் அவசியம் என கூறியுள்ள நிலையில், பட்டப்படிப்பு படித்தவர்களில் இதே கருத்தை கூறியவர்கள் 21 சதவீதம் பேர் மட்டுமே. எனினும், 67 சதவீதம் பேர் திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கையில் நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தனர்.


வாழ்க்கையில் குடும்பம் என்பது மிகவும் முக்கியம் என கூறியவர்கள் 75 சதவீதம் பேர். குழந்தையில்லாத தம்பதியாக இருந்தாலும் அது ஒரு குடும்பம் என 88 சதவீதம் பேரும், குழந்தையுடன் கூடிய தம்பதிதான் குடும்பம் என 80 சதவீதம் பேரும், குழந்தையுடன் தாயோ அல்லது தந்தையோ மட்டும் இருந்தாலும் அதுவும் குடும்பம்தான் என 86 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.