அமெரிக்கா, கனடா மற்றும் ஐஸ்லாந்தை தாக்கிய இயற்கைச் சீற்றங்கள்

24/05/2011 08:44

அமெரிக்காவில் சூராவளி

அமெரிக்காவில் மிசெளரி மாகாணத்தில் உள்ள ஜோப்ளின் நகரில் ஏற்பட்ட கடும் புயல், சூறாவளிக்கு 89 பேர் பலியாகினர்.

இத்தகவலை மிசெளரியைச் சேர்ந்த உள்ளூர் ஊடகத்தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜோப்ளின் நகரத்தில் பரவலாக பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக ஜான் மில்லர் என்னும் பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.

 

கட்டடங்கள், கேஸ் நிரப்பும் நிலையங்கள், வால்மார்ட் உள்ளிட்ட கடைகள், வணிக வளாகங்கள் என்று நகரம் முழுவதும் முழுமையாக சேதமடைந்துள்ளது.

 

மின்சாரம் மற்றும் தொலைபேசி இணைப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறியுள்ளார். இதனிடையே சூறாவளி பாதிப்புகள் மேலும் தொடரலாம் என்றும் பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

 

இதையடுத்து மிசெளரி மாகாணத்தில் ஆளுநர் ஜே நிக்ஸன் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார். சூறாவளியில் உயிரிழந்தவர்களில் இதுவரை 50 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

 

மேலும் இங்கு பல கட்டிடங்கள் சேதமைந்துள்ளதாகவும் இதில் சிலர் உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

 

கனடாவில் காட்டுத்தீ

 

அல்பெர்டாவில் உள்ள ஸ்லேவ் லேக் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 450 கட்டிடங்கள் எரிந்து நாசமாயின. கடுமையான காற்று காரணமாக தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

நகரில் மூன்றில் ஒரு பகுதி கட்டிடங்கள் தீயில் சேதம் அடைந்தன. தீ கடுமையாக பரவியதை தொடர்ந்து வார இறுதியில் 7 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

தங்கள் சொந்த பொருட்களை எடுப்பதற்கும் அங்குள்ளவர்களுக்கு அனுமதி தரப்படவில்லை. தீ வேகம் மோசமாக இருந்ததால் உயிரிழப்பு ஏற்படும் என்பதால் யாரும் குறிப்பிட்ட பகுதிகளில் அனுமதிக்கப்படவில்லை. தீ விபத்து நடந்த வீடுகளில் சமையல் எரிவாயு கசிவு உள்ளதா என்றும், இதர அபாய பொருட்கள் உள்ளதா என்றும் ஆய்வு செய்யப்பட்டது.

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய தங்குமிடம் இல்லாத பட்சத்தில் உதவி அளிப்பதாக அல்பெர்டா அரச நிர்வாகம் தெரிவித்து உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு செலவின நிதியையும் ஓகஸ்ட் மாதம் இறுதி வரை அளிப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

இதன் படி பெரியவர்களுக்கு தலா 1250 டொலரும், சிறியவர்களுக்கு 500 டொலரும் அளிக்கப்படுகிறது. தீ பகுதியில் இருந்து வெளியேறிய மக்கள் தங்களது கடனட்டை மூலம் நிதி உதவியை பெறுகிறார்கள். சனிக்கிழமை மக்கள் பல்வேறு அவசர நிலை முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.

எட்மாண்டன் கிராண்ட் மாக் எவான் பல்கலைகழகம் மாணவர் குடியிருப்பை தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒதுக்கி உள்ளது. ஸ்லேவ் லேக் பகுதியில் பல வீடுகள் எரிந்து தரைமட்டமானதால் அவர்களது நிலைமை கேள்விக் குறியாக உள்ளது. காட்டுத் தீ குறித்து வெளியே உரிய எச்சரிக்கை இல்லை என பாதிக்கப்பட்டவர்கள் கூறினர்.

 

கனடாவில் வெள்ளம்

கியூபெக்கின் ரிச்செலியு ஆற்றில் வரலாறு காணாத வகையில் மழை வெள்ளம் உயர்ந்துள்ளது. வெள்ள நீர் பல வீடுகளில் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

 

மழை வெள்ளத்தை கட்டுப்படுத்த நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு வானிலை ஒத்துழைக்கவில்லை. பலத்த காற்றுடன் மழை தொடர்ந்து பெய்யும் என வானிலை துறை எச்சரித்து உள்ளது.

 

கியூபெக் மக்கள் பாதுகாப்பு சேவை செய்தித் தொடர்பாளர் பிரான்ஸ் வில்வியே லோய்சல் கூறுகையில்,"இன்னும் சில நாட்களில் மழை வெள்ள அளவு 30 செ.மீக்கும் மேல் அதிகரிக்கும்" என்றார்.

 

இதனால் பெய்த மழை அளவு 100 செ.மீயை எட்டக்கூடும். காற்றும் மழையும் வடக்குப்பகுதியில் இருந்து தண்ணீரை பெருமளவு கொண்டு வரும். இதனால் செயின்ட் ஜுன் சர் ரிசெலியு பிராந்தியம் மழை நீரில் மேலும் மிதக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

 

இந்தப் பகுதி மொன்றியலின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. மழைக் காற்று மணிக்கு 80 கி.மீ வேகத்தில் வீசும். மழை கொட்டுவதால் உள்ளூர் வணிகம் மிக மந்தமாக உள்ளது. இதனால் வர்த்தகர்கள் கவலை அடைந்துள்ளனர். தண்ணீருக்கு இடையே தான் நாங்கள் நின்று கொண்டு இருக்கிறோம் என வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.

 

நோயின் பகுதியில் 210 வீடுகள் தண்ணீரில் மூழ்கி உள்ளனர். அங்கு 100 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அரச நிர்வாக நஷ்டஈடு பெற தகுதி உள்ளவர்களாக உள்ளனர்.

 

மழை வெள்ளம் பாதித்த பகுதியை கியூபெக் முதல்வர் ஜுன் சாரஸ்ட் பார்வையிட்டார். தெற்கு மொன்றியலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ 800 ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

 

கடந்த ஒரு மாதத்திற்கு முன் பெய்ய துவங்கிய மழை தொடர்ந்து நீடிப்பதால் 3 ஆயிரம் வீடுகள் தண்ணீரில் மிதக்கின்றன. ஆயிரம் பேர் அவர்களது வீடுகளில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

 

ஐஸ்லாந்தில் பயங்கர எரிமலை வெடிப்பு

ஐஸ்லாந்து பனிப்பாறைப் பகுதியில் உள்ள கிரிம்ஸ்வோடன் எரிமலை சனிக்கிழமை வெடித்தது. அதிலிருந்து புகை தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது.

 

எரிமலை வெடித்த போது அந்த வழியாக ஒரு விமானம் சென்றது. அந்த விமானம் பத்திரமாக சேர்ந்ததா என்றும் ஆய்வு செய்யப்படுகிறது. இந்த தகவலை ஐஸ்லாந்து வானிலை ஆய்வு மைய அலுவலக அதிகாரி ஹார்ல்டர் எரிக்சன் தெரிவித்தார்.

 

கிரிம்ஸ்வோடன் எரிமலையில் ஜி.எம்.டி நேரம் இரவு 7 மணிக்கு புகை வெளி வரத் துவங்கியது. 4 மணி நேரத்தில் இந்த புகை 11 கிலோ மீற்றர் அளவில் அதாவது 6.8 மைல் அளவிற்கு பரவியது.

 

மற்றொரு வானிலை ஆய்வு மைய அதிகாரி பிரிட்ஜான் மாக்னுசன் கூறுகையில்,"2 மணி நேரத்தில் 20 கிலோ மீற்றர் தூரத்திற்கு கரும்புகை பரவியது" என தெரிவித்தார்.

 

எரிமலை வெடிப்பால் சாம்பல் நிறப்புகை சுற்றுப்பகுதியில் கடுமையாக பரவியது. இதனால் அருகாமையில் உள்ள இடங்கள் தெரியவில்லை. எரிமலை வெடிப்பால் அந்த வான் பகுதியில் சிறிது நேரம் விமானங்கள் பறக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. சாலைப்போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

 

ஐஸ்லாந்தில் மிக தீவிரமான எரிமலை வெடிப்பு உள்ள பகுதி கிரிம்ஸ்வோடன் ஆகும். கடந்த 1922ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை 9 முறை இங்கு எரிமலை வெடித்துள்ளது.

 

வடக்கு அட்லாண்டிக் தீவு தேசமான வாட்னஜோகுல் பனிப்பகுதிக்கு தாழ்வாக இப்பகுதி அமைந்துள்ளது. ஐஸ்லாந்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் எஜா போல் பகுதியில் எரிமலை வெடித்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி நியூஸ்ஓநியூஸ்.காம்