அமெரிக்கா, பாகிஸ்தான், இலங்கையை விட இந்தியாவில் தான் பெட்ரோல் விலை அதிகம்!

10/09/2012 01:07

 

டெல்லி: அமெரிக்கா மற்றும் நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசத்தை விட இந்தியாவில் பெட்ரோல் அதிகமாக விற்கப்படுகிறது.

இத் தகவலை மத்திய பெட்ரோலியத்துறை இணையமைச்சர் ஆர்.பி.என். சிங்கே நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், அமெரிக்காவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இந்திய மதிப்பில் ரூ. 50.44க்கு விற்கப்படுகிறது.

அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கையை விட இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகம். அதே நேரத்தில் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் விலை குறைவு.

டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ. 68.46க்கு விற்கப்படுகிறது. பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 53.32க்கும், இலங்கையில் 61.56க்கும், வங்கதேசத்தில் ரூ. 62.25-க்கும் விற்கப்படுகிறது.

இந்தியாவிலிருந்து பெட்ரோலை இறக்குமதி செய்யும் நேபாளத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 74.77க்கு விற்கப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளான பிரான்சில் ஒரு லிட்டர் பெட்ரோல் இந்திய மதிப்பில் ரூ. 105.10க்கும், ஜெர்மனியில் ரூ. 111.03க்கும், இங்கிலாந்தில் ரூ. 114.42க்கும், இத்தாலியில் ரூ. 119.69க்கும் விற்கப்படுகிறது.

டீசல் விலை இந்தியாவில் குறைவு...

டெல்லியில் ஒரு லிட்டர் டீசல் ரூ. 41.32க்கு விற்கப்படுகிறது. இதுவே பாகிஸ்தானில் இந்திய மதிப்பில் ரூ. 59.56க்கும், இலங்கையில் ரூ. 41.36க்கும், வங்கதேசத்தில் ரூ. 49.08க்கும், வங்கதேசத்தில் ரூ. 57.91க்கும் விற்கப்படுகிறது.

அமெரிக்காவில் ஒரு லிட்டர் டீசல் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 54.55க்கும், இங்கிலாந்தில் ரூ. 99.38க்கும், பிரான்சில் ரூ. 77.84க்கும், ஜெர்மனியில் ரூ. 83.36க்கும், இத்தாலியில் ரூ. 93.11க்கும் விற்பனை செய்யப்படுகிறது என்று தெரிவித்தார் அமைச்சர்.

இவர் டெல்லி விலையை வைத்து இந்த புள்ளிவிவரத்தைக் கூறியுள்ளார். இந்தியாவிலேயே பெங்களூரிலும் கொல்கத்தாவிலும் தான் தான் பெட்ரோல், டீசல் விலை மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் மீது லிட்டருக்கு மத்திய அரசு மட்டும் ரூ. 14.78 வரி விதிக்கிறது. இது தவிர மாநில அரசுகளும் வரியை போடுகின்றன. டீசல் மீதான மத்திய அரசின் வரி ரூ. 2.06 ஆகவும் மாநில அரசுகளின் வரியும் குறைவாக உள்ளது. இதனால் தான் விலை குறைவாக உள்ளது.

நாட்டிலேயே பெட்ரோல் விலை கோவாவில் தான் குறைவு. அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 57 தான். காரணம், அந்த மாநில அரசு பெட்ரோல் மீது எந்த வரியையும் போடுவதில்லை.

Oneindiatamil