அயோத்தி தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முஸ்லிம் சட்ட வாரியம் முடிவு

17/10/2010 15:07

அக்.17: அயோத்தி நில வழக்கில் அலாகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்ய அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் முடிவு செய்திருக்கிறது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றாகப் பிரித்து ராமர் கோயில் கமிட்டி, நிர்மோகி அகாரா, பாபர் மசூதி கமிட்டி ஆகிவற்றுக்கு வழங்க வேண்டும் என அலாகாபாத் உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் தீர்ப்பில் கூறப்பட்டது. 

இந்த நிலையில், அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியத்தின் செயற்குழுக் கூட்டம் லக்னௌவில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு வாரியத்தின் தலைவர் மௌலானா ரபே ஹாஸ்னி நட்வி தலைமை வகித்தார். அயோத்தி நில வழக்கில் அலாகாபாத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவது தொடர்பான தீர்மானம் இந்தக் கூட்டத்தில் கொண்டுவரப்பட்டது.

"அலாகாபாத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால் ஏற்பட்டிருக்கும் தடைகளை அகற்றுவதற்காக உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவது இந்திய முஸ்லிம்களின் உரிமை" என இந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தத் தீர்மானத்துக்கு அனைவரும் ஆதரவு தெரிவித்ததாகவும். அதனால், தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாகவும் வாரியத்தின் துணைப் பொதுச் செயலாளர் அப்துல் ரஹீம் குரேஷி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பிரச்னையை பேச்சுமூலம் சுமுகமாகத் தீர்ப்பதற்கு முகமது ஹாசிம் அன்சாரி மேற்கொண்டிருக்கும் முயற்சிகளுக்கு இந்தக் கூட்டத்தில் வரவேற்பில்லை.

Dinamani

இந்நிலையில், செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டியளித்த நிர்மோகி அகாராவின் தலைவர் மகந்த் பாஸ்கர் தாஸ் கூறியதாவது:

ராமஜென்ம பூமியின் வெளிப்புறத்தில் பக்தர்கள் வலம் வரும், "பஞ்சகோச பரிக்ரமா' இடத்துக்கு வெளியில்தான் மசூதி அமைக்க இடம் தரமுடியும். ராமஜென்ம பூமியில் மசூதி அமைக்க இடம் தர முடியாது. ஏற்கனவே நிர்மோகி அகாராவின் நிர்வாகத்தில் இருந்த இடங்கள் ஐகோர்ட் தீர்ப்பின் படி மீண்டும் அகாராவுக்கே சொந்தம் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. மற்றொரு இடமான ராமர் விக்ரகம் இருக்கும் இடம் மீதான வழக்கு தான் இன்னும் முடிவடையவில்லை. இந்தச் சூழலில் சுப்ரீம் கோர்ட்டுக்கு போவதைத் தவிர வேறு வழியில்லை. தற்போதைய பேச்சுவார்த்தை ஏதாவது விளைவைத் தருமா என்று உறுதியாகச் சொல்ல முடியாது. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பின்னும் பேச்சுவார்த்தை நடக்கும். பேச்சுவார்த்தைக்கான கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன. இவ்வாறு மகந்த் பாஸ்கர் தாஸ் தெரிவித்தார்.

Dinamalar