அயோத்தி நில பிரச்சனையில் பேச்சுவார்த்தைக்கு தயார் - நிர்மோஹி அகாரா

06/10/2010 15:34

ராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டுவதற்காக பிற வழக்காளர்களுடன் சமரசப் பேச்சுக்குத் தயாராக உள்ளோம் என்று அயோத்தி வழக்கில் வாதியான நிர்மோஹி அகாடா அறிவித்துள்ளது.

ராமர் கோயில் கட்டுவதற்கு ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து ஆலோசிக்க ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் மூத்த உறுப்பினர் நியாஸ் ராம்விலாஸ் வேதாந்தி, நிர்மோஹி அகாடா தலைவர் பாஸ்கர் தாஸ் செவ்வாய்க்கிழமை அயோத்தியில் சந்தித்தார்.

இந்தச் சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களுக்கு பாஸ்கர் தாஸ் பேட்டியளித்தார். கோயில் கட்டுவது என்ற அடிப்படையில் சமரசப் பேச்சுக்கு தயாராக உள்ளதாக அப்போது அவர் கூறினார்.

அலாகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பின்படி சர்ச்சைக்குரிய இடத்தில் மூன்றில் ஒரு பகுதியை பெற்ற அமைப்பு நிர்மோஹி அகாடா.

ராமர் கோயில் கட்டுவதற்காக ஹிந்து மகாசபையுடன் இணைந்து செயல்படத் தயாராக உள்ளோம் என்றார் பாஸ்கர் தாஸ்.

ராமர் கோயில் கட்டுவதற்காக யாருடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு  தயார்.  சன்னி முஸ்லிம் வக்ஃப் வாரியம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது. அவ்வாறு மேல் முறையீடு செய்யும் நிலையில் ஹிந்து மகா சபையுடன் இணைந்து நிர்மோஹி அகாடா வழக்கைச் சந்திக்கும் என்றார் பாஸ்கர் தாஸ்.

மசூதி கட்ட நாங்கள் ஒத்துழைப்பு கொடுககப் போவதில்லை. எனவே கோயில் கட்டுவதற்கு என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும் எங்கள் தரப்பில் முழு ஒத்துழைப்புத் தருவோம் என்றார்.

சன்னி வக்ஃப் வாரியத்தின் மனுவை அலாகாபாத் நீதிமன்றம் நிராகரித்துவிட்ட நிலையில், அவர்களுக்கு எதற்காக மூன்றில் ஒரு பகுதி நிலம் ஒதுக்கப்பட்டது என்று தெரியவில்லை. ராமஜென்ம பூமி வளாகத்துக்கு அருகே எந்தப் பகுதியிலும் மசூதி கட்டவதை நாங்கள் ஏற்க மாட்டோம். வேறு எங்காவது கட்டிக் கொள்ளட்டும் என்றார் பாஸ்கர் தாஸ்

பின்னர் வேதாந்தி பேசினார். மத்திய அரசு கையகப்படுத்தி வைத்துள்ள 67 ஏக்கர் நிலம் ராம் லாலாவுக்கு சொந்தமானது. ராமர் கோயில் கட்டுவதற்கு அதை வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரான முகமது ஹசீம் அன்சாரி, இந்தப் பிரச்னை சமரசமாக தீர்க்கப்பட வேண்டும் என்று ஏற்கெனவே விருப்பம் தெரிவித்துள்ளார் என்றார் வேதாந்தி. அன்சாரியுடன் நீங்கள் பேசினீர்களா என்று கேட்டபோது, இல்லை அகாடா பரிஷத் தலைவர் ஞானிதாஸ் பேசினார் என்றார்.

அயோத்திப் பிரச்னைக்கு சமரசத் தீர்வு காண இதுதான் தக்க தருணம் என்று பாஜக மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார்.

இந்த வழக்கில் தொடர்புடைய முதியவர் முகமது ஹசீம் அன்சாரி, சமரசப் பேச்சுக்கு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது எனறார் சுஷ்மா.

அயோத்தி ராமஜென்மபூமி-பாபர் மசூதி பிரச்னைக்கு சமரசத் தீர்வு காண ஹிந்து, முஸ்லிம் அமைப்புகள் முயற்சி மேற்கொண்டுள்ளதை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது.

பாபர் மசூதி இடிக்கப்பட்டதை அலகாபாத் உயர் நீதிமன்றம் நியாயப்படுத்தவில்லை. பாபர் மசூதி இடிக்கப்பட்டது குற்ற செயல்தான். குற்றவாளிகளை நீதிக்கு முன் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து அதில் தீர்ப்பு வர கால தாமதம் ஆகும் என்பதால். சமரசப் பேச்சு மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று பாஜக, ஹிந்து அமைப்புகள்  தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் முஸ்லிம் தரப்பில் தொடர்ந்து மெளனம் காத்து வருகின்றனர். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக முஸ்லிம் தரப்பில் அறிவித்துள்ளது.

தினமணி