அயோத்தி பிரச்சினையில் அப்துல் கலாம், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் சமரசம் செய்ய வேண்டும் - `நிர்மோகி அகாரா' வேண்டுகோள்

13/10/2010 15:52

அயோத்தி பிரச்சினையில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மற்றும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஆகியோர் சமரச முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று, நிர்மோகி அகாரா அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

அப்துல் கலாம்

அயோத்தி பிரச்சினையில், கோர்ட்டுக்கு வெளியே பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காண்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பிரச்சினையில் பிரதான வழக்கை தொடர்ந்த 90 வயது முஸ்லிம் முதியவர் மற்றும் நிர்மோகி அகாரா இந்து அமைப்பு பிரதிநிதிகள் இதற்கான பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளனர்.

இந்த நிலையில், அயோத்தி பிரச்சினையில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் போன்ற ஆன்மிக தலைவர்கள் மற்றும் இரு சமுதாயத்திலும் செல்வாக்குமிக்க மத அமைப்புகள் சமரச முயற்சியில் ஈடுபட முன்வர வேண்டும் என்று நிர்மோகி அகாரா அமைப்பு வேண்டுகோள் விடுத்து இருக்கிறது.

அமைதி விளக்கு

உடல் நலிவுற்ற நிலையில் இருக்கும் நிர்மோகி அகாரா அமைப்பின் தலைவர் மகந்த் பாஸ்கரதாசின் சிறப்பு பிரதிநிதியான பூஜாரி ராம்தாஸ் இந்த தகவலை நேற்று அயோத்தியில் வெளியிட்டார்.

"அயோத்தியில் அமைதி ஏற்படுவதற்கான விளக்கை நாங்கள் ஏற்றி வைத்து இருக்கிறோம். மக்களால் மதிக்கப்படும், சமுதாயங்களில் செல்வாக்கு மிக்க தலைவர்களும் இந்த சமரச முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இந்து மகாசபையில் கருத்து வேறுபாடு

இதற்கிடையில், அயோத்தி வழக்கு தொடர்பாக, அகில பாரத இந்து மகாசபையின் தலைவர் சுவாமி சக்கரபாணி சுப்ரீம் கோர்ட்டில் `கேவியட்' மனு தாக்கல் செய்து இருப்பதற்கு அந்த அமைப்பில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. "சுவாமி சக்கரபாணி, பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்க ஏஜெண்டாக செயல்படுவதாக'', இந்து மகாசபை அமைப்பின் உ.பி. மாநில தலைவர் கமலேஷ் திவாரி குற்றம் சாட்டினார்.

அந்த மனுவுக்கு ஆட்சேபம் தெரிவித்து மற்றொரு மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய இருப்பதாக, நேற்று அவர் நிருபர்களிடம் தெரிவித்தார். அயோத்தி பிரச்சினையில் அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வது குறித்து இந்து மகாசபையின் ஹரிசங்கர் ஜெயினை சந்தித்து ஆலோசனை நடத்தி இருப்பதாகவும் அவர் கூறினார்.

Dinathanthi