அயோத்தி ரத யாத்திரை சரியானதுதான் என்று உணர்கிறேன்-அத்வானி

05/10/2010 14:25

அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பைப் பார்க்கும்போது நான் அயோத்தி தொடர்பாக மேற்கொண்ட ரத யாத்திரை சரிதான் என்ற உணர்வு வருகிறது என்று கூறியுள்ளார் மூத்த பாஜக தலைவர் எல்.கே.அத்வானி.

1989ம் ஆண்டு அயோத்தியில் ராமர் கோவில் கட்டக் கோரி ரத யாத்திரையைத் தொடங்கினார் அத்வானி. அப்போது அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ரத யாத்திரையின் முடிவில்தான் பாபர் மசூதியை கர சேவகர்கள் என்ற பெயரில் சங் பரிவார் அமைப்பினர் இடித்தனர்.

இந்த நிலையில் அந்த ரத யாத்திரை சரிதான் என்று தற்போது கூறியுள்ளார் அத்வானி. இதுதொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அத்வானி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது...

அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்துள்ள அயோத்தி தீர்ப்பு குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் தேவையற்றது. சட்டத்தை மீறி நம்பிக்கைக்கு உயர்நீதிமன்றம் மதிப்பளித்துள்ளாக கூறக் கூடாது. நம்பிக்கையை சட்டப்பூர்வமாக அலகாபாத் உயர்நீதிமன்றம் நிலை நிறுத்தியுள்ளது.

பைசாபாத்தில் சரயு நதிக்கரையில், தனியாக மசூதி கட்டிக்கொள்ள முஸ்லீம்கள் முன்வர வேண்டும் என பாஜக தலைவர் நிதின் கத்காரி கூறியது தவறில்லை.

எனது ரத யாத்திரை சரியானதுதான் என்று இப்போது நான் உணர்கிறேன். அயோத்தி ராமர் கோவில் இயக்கத்தை பாஜக ஆரம்பிக்கவில்லை. அது 1949ம் ஆண்டே தொடங்கி விட்டதாகும்.

இரு சமூகத்தினருக்கும் இடையே கோவில் கட்டுவது தொடர்பாக பேச்சுவார்த்தை மூலம் உடன்பாடு காண முடியும். அது நடைபெற்றால் நல்லதுதான். எதுவாக இருந்தாலும் இரு தரப்பினரும் பேசி முடிவு செய்வது நல்லது.

ராமர் பிறந்ததாக கோடானு கோடி மக்கள் கருதும் ஒரு இடத்தில் கோவில் கட்டப்பட வேண்டும் என்ற உணர்வைத்தான் இந்த தீர்ப்பு நிலைநிறுத்தியுள்ளது. அதேசமயம், இரு தரப்பினரும் சேர்ந்து இந்தமுடிவை எடுத்தால் மேலும் சிறந்ததாக அது அமையும்.

அயோத்தி தீர்ப்பை வைத்து அது மதுரா, காசி கோவில்கள் விவகாரத்திலும் எதிரொலிக்குமா என்ற கேள்வியே தேவையில்லை. அது வேறு, இது வேறு.

அயோத்தி பிரச்சினையில் நாங்கள் பலமுறை சமரசத்திற்கு முயன்றோம். ஆனால் அது நடைபெறவில்லை. நமது நாட்டின் அரசியல் வரலாற்றையே அயோத்தி பிரச்சினை மாற்றி விட்டது.

பாபர் மசூதி இடிப்பை அயோத்தி தீர்ப்பு நியாயப்படுத்துகிறதா என்ற கேள்விக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் எனது வாழ்க்கையில் இன்னும் மிகப் பெரிய சோக நாளாக நீடிக்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை.

பாபர் மசூதியை இடிக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொள்ளாதீர்கள் என்றுதான் நான் ராமர்கோவில் இயக்கத்தினருக்கு தொடர்ந்து கூறி வந்தேன்.

1992ம் ஆண்டு, டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தன்று அப்போது எனது அருகே அமர்ந்திருந்த பிரமோத் மகாஜன், ஏன் இப்படி சோகமாக இருக்கிறீர்கள். லக்னோவுக்குக் கிளம்பிச் செல்லுங்கள் என்றார்.

நானும் சரி என்று மாலையில் லக்னோ புறப்பட்டேன்.அங்கு வந்து சேர்ந்ததும், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக லோக்சபா சபாநாயகருக்குத் தெரிவித்தேன்.

ஒரு அரசியல் கட்சி எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். ஆனால் அதை சட்டப்பூர்வமாகத்தான் செய்ய வேண்டுமே தவிர, கட்டாயப்படுத்தி, பலவந்தப்படுத்தி எதையும் செய்யக் கூடாது.

1949ம் ஆண்டு ராமர் சிலை வைக்கப்பட்டது. அதை அகற்றக் கூடாது என்று கோர்ட்டுகளும் கூறின. நீண்ட காலத்திற்கு அங்குள்ள கதவுகள் மூடப்பட்டிருந்தன. வழிபட வரும் பக்தர்கள் வெளியே நின்றுதான் வணங்கிச் சென்றனர். பின்னர் ராஜீவ் காந்தி காலத்தில்தான் கோர்ட் உத்தரவை ஏற்று கதவுகள் திறக்கப்பட்டன. ராஜீவ் காந்தி காலத்தில்தான் கோவிலுக்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது.

எனவே கோவில் கட்ட விரும்பியோர் சட்டத்திற்குப் புறம்பாக எதையும் செய்யவில்லை என்பதே எனது கருத்து. அதேசமயம், அதை எதிர்ப்போர் கோர்ட் உத்தரவுகளை எதிர்ப்பவர்களாகின்றனர்.

எனது ரத யாத்திரையின்போது என்னிடம் பலரும் உண்மையான மதச்சார்பின்மை எது, போலி மதச்சார்பின்மை எது என்பதை நீங்கள் விவாதத்திற்கு தூண்டி விட்டுள்ளீர்கள் என்று பாராட்டினர்.

அப்போதுதான் நான் முதல் முறையாக போலி மதச்சார்பின்மை என்ற பதத்தை பயன்படுத்தத் தொடங்கினேன். சுதந்திரம் பெற்ற ஆரம்ப காலத்தில் கூட இந்த கேள்விகள் எழத் தொடங்கியிருந்தன.

நான் என்னை உண்மையான மதச்சார்பற்றவனாக கருதுகிறேன். அதற்காக பெருமைப்படுகிறேன். ஆனால் இன்று போலி மதச்சார்பின்மையை பலரும் கடைப்பிடிக்கின்றனர், ஓட்டு வங்கிக்காக. வாக்குகளைப் பெறுவதற்காக அவ்வாறு செய்கின்றனர்.

நான் சாதுக்களிடமும், துறவிகளிடமும் பலமுறை பேசுகையில், நீங்கள் முஸ்லீம் தலைவர்களிடம் பேசுங்கள், பேச்சுவார்த்தையில் உடன்பாட்டை ஏற்படுத்த முயலுங்கள் என்று கூறியுள்ளேன். இப்போதும் கூட கூறியுள்ளேன். தற்போது அந்த பேச்சுவார்த்தை நடந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

கோர்ட் உத்தரவு மற்றும் பேச்சுவார்த்தையின் மூலம் ஏற்படும் உடன்பாடு, இவை இரண்டும் சேர வேண்டும் என நான் விரும்புகிறேன். அதுதான் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்த உதவும் என்பது எனது எண்ணம் என்றார் அத்வானி.

Thats Tamil