அயோத்தி வழக்கு பற்றி அத்வானி கருத்து: பழைய காயத்தை கிளற வேண்டாம் காங்கிரஸ் கண்டனம்

26/09/2010 10:01

அயோத்தி விவகாரத்தில் அத்வானியோ அல்லது பா.ஜனதவோ பழைய காயங்களை கிளற வேண்டாம் என்று காங்கிரஸ் கூறி உள்ளது.

அத்வானி கருத்து

அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி நில விவகாரம் தொடர்பான வழக்கில் தீர்ப்பளிக்க அலகாபாத் ஐகோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த நிலையில், குஜராத் மாநிலம் சோம்நாத்துக்கு நேற்று சென்ற பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி, `கடந்த அறுபது ஆண்டு காலமாக நிலுவையில் உள்ள வழக்கில் தீர்ப்பு வழங்க சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதே பெரும்பாலான இந்துக்களின் உணர்வு' என்றார்.

அத்வானியின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சியின் செய்தி தொடர்பாளர் மனீஷ் திவாரி கூறியதாவது:-

பிதாமகர்-பீஷ்மர்

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பிதாமகர்-பீஷ்மராக இருப்பவர், அத்வானி. இருபது ஆண்டுகளுக்கு முன், சோம்நாத்தில் இருந்து அயோத்திக்கு அவர் ஒரு ரத யாத்திரையை தொடங்கினார். அதனால் மத ரீதியிலான வன்முறை தீ பரவியது. அதன் காயங்கள் வெளிப்படையானவை. அவற்றை இந்த நாடு சமாளிப்பதில் படாதபாடு பட்டது.

சம்பவம் நடந்த பிறகு ஞானத்தை பெறுபவராக இருக்கும் அத்வானியோ அல்லது பா.ஜனதா கட்சியோ இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் மதச்சார்பின்மைக்கு எந்தவித விளைவுகளையும் ஏற்படுத்த மாட்டார்கள் என நம்புகிறேன். குணமடைவதற்கு நீண்டகாலத்தை எடுத்துக் கொண்ட பழைய காயங்களை எந்த வகையிலும் கிளறும் நடவடிக்கையில் ஈடுபட மாட்டார்கள் என்றும் நம்புகிறோம்.

இவ்வாறு திவாரி தெரிவித்தார்.
 

Dinathanthi