அயோத்தி விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும்: பாஜக

07/11/2010 13:30

அயோத்தி விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு பேச்சுவார்த்தைக்கு முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்று பாரதிய ஜனதாக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.


மத்தியில் வாஜ்பாய் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடந்த போது, காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் தலையீட்டில் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நடைபெற்று வந்தது; கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில் அது தற்போது நின்று போயுள்ளது.

தடைப்பட்ட நிலையில் இருந்து மீண்டும் அந்தப் பேச்சுவார்த்தைகள் தொடர வேண்டும். அதற்கு மத்திய அரசு தலையிட்டு, ஆக்கப்பூர்வமான முறையில் பேச்சுவார்த்தை தொடர உதவ வேண்டும் என்று, பா.ஜ. கட்சியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வினய் கத்தியார் கூறியுள்ளார்.


மேலும் அவர், ''அயோத்தி விவகாரம் உள்ளூர் விவகாரம் இல்லை; தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் முக்கியமாக விவாதிக்கப்படும் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இதன் முடிவுகள் உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் மற்றும் இந்துக்களால் உற்று நோக்கப்படுகிறது. இப்படிப்பட்ட முக்கியமான விவகாரத்தில் பிரதமர் அளவில் தலையிட்டு பிரச்னை தீர்க்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


பாபர் மசூதியை இடித்தார்கள் என்று எங்கள் பேரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உண்மையில் இந்த இடிப்பின் பின்னணியில் நாங்கள் இல்லை. அப்போதைய பிரதம மந்திரியாக இருந்த நரசிம்ம ராவே அடுத்தடுத்த கட்டங்களில் இப்படிப்பட்ட செயல் நடப்பதற்கான பின்னணியில் இருந்தார். மேலும், அப்போதைய காங்கிரஸ் அரசுதான் அயோத்தியில் ராம்லல்லா சிலை வைப்பதற்கும் காரணமாக இருந்தது. அப்போது பா.ஜ.க அங்கு இல்லை” என்றார் வினய் கத்தியார்.

nakkheeran.in