அயோத்தியில் புதிய மசூதி கூடாது: வி.எச்.பி.

24/10/2010 14:53

அயோத்தியில் புதிதாக மசூதி எதையும் கட்டக்கூடாது என்று சந்த் உச்சதிகாரி சமிதி என்ற ஹிந்துத் தலைவர்கள் அமைப்பு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.

 

இதை விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலர் பிரவீண் தொகாடியா தில்லியில் நிருபர்களிடம் சனிக்கிழமை தெரிவித்தார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடமாகக் கருதப்படும் இடம்தான் ஸ்ரீ ராமர் பிறந்த இடம் என்று அலாகாபாத் உயர் நீதிமன்றமே தீர்ப்பில் தெரிவித்திருப்பதால், அந்த இடத்தைச் சுற்றியிருக்கும் 67 ஏக்கர் நிலத்தையும் சேர்த்து தந்து, ராமருக்குப் பெரிய கோயில் கட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தொகாடியா தெரிவித்தார்.சரயு நதியின் இக்கரையிலாவது அக்கரையிலாவது மசூதி கட்ட அனுமதி தரக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

சங்கர் தயாள் சர்மா குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த காலத்தில் ராமர் கோயில் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்துக்கு அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு அளித்த உறுதி மொழியை, இப்போதைய அரசின் தலைவரான பிரதமர் மன்மோகன் சிங் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

சம்பவ இடத்தில் கோயில் இருந்ததற்கான ஆதாரங்களைக் கொடுத்தால் முழு நிலத்தையும் ஹிந்துக்களிடமே கொடுத்துவிடுவதாக அந்த உறுதிமொழியில் காங்கிரஸ் அரசு கூறியிருந்தது என்றும் தொகாடியா நினைவுபடுத்தினார்.

 

சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் இருந்ததா இல்லையா என்பதை விசாரித்து அறிக்கை தரவும் என்று அரசியல் சட்டத்தின் 143-வது பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு கேட்டுக்கொண்டது.

 

அப்படி கருத்து தெரிவித்தால் என்ன செய்யப் போகிறீர்கள் என்று உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் கேட்டது.

 

அந்த இடத்தில் கோயில் இருந்தது என்று ஆதாரப்பூர்வமாகத் தெரியவந்தால் முழு இடத்தையும் ஹிந்துக்களிடம் ஒப்படைத்துவிடுவோம் என்று மத்திய அரசு உறுதி மொழி அளித்தது என்றும் தொகாடியா குறிப்பிட்டார்.

 

அயோத்தியில் இடிக்கப்பட்ட இடத்துக்குக் கீழே கோயில் அமைப்பு இருந்தது என்று உயர் நீதிமன்றத்தின் 3 நீதிபதிகளுமே கூறியிருப்பதால், அந்த இடம்தான் ராமர் பிறந்த இடம் என்ற ஹிந்துக்களின் நம்பிக்கையைக் குறிக்கும் வகையில், அங்கே சிறப்பு சடங்கு ஒன்றை நிறைவேற்றப் போவதாகவும் தொகாடியா குறிப்பிட்டார்.

Dinamani