அரசியல் சார்புடன் செயல்படும் கிராம ஊராட்சிகள்

06/10/2010 15:11

கிராம ஊராட்சி அலுவலகங்களில் உள்ள கட்சி அடையாளங்கள் நீக்கப்பட வேண்டும்; கிராம ஊராட்சியின் நிர்வாகம், செயல்பாடுகள் அரசியல் சார்பின்றி நடைபெற வேண்டும் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

உள்ளாட்சி அமைப்புகளில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி, ஒன்றியக் குழு மற்றும் மாவட்ட ஊராட்சித் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இதில் கிராம ஊராட்சி தேர்தல் மட்டும் கட்சி சார்பின்றி நடத்தப்படுகின்றன.

 

கிராம முன்னேற்றத்தில் ஊர் மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும். அரசியல் கலப்பினால் கிராம மேம்பாடு தடைபடக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு நியாயமான காரணங்களின் அடிப்படையில்தான், இந்தத் தேர்தல்கள் அரசியல் சார்பின்றி நடத்தப்படுகின்றன. அதனால், கிராம ஊராட்சி தேர்தல்களில் தலைவர், உறுப்பினர் பதவிகளுக்குப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சுயேச்சை சின்னங்களே தரப்படுகின்றன.

 

ஆனால், இப்படி ஒரு முறை உருவாக்கப்பட்டதன் நோக்கதையே சீர்குலைப்பதாக இப்போதைய நடைமுறைச்  செயல்பாடுகள் அமைந்துள்ளன.

 

ஊர் நடவடிக்கைகளில் ஆர்வம் செலுத்துபவர்களையும், அந்தந்தத் தெருக்களில் சமூக சேவை மனப்பான்மையுடன் செயல்படுபவர்களையும் ஊராட்சித் தலைவராகவும், வார்டு உறுப்பினர்களாகவும் தேர்தலில் நிற்கவைத்து, தேர்ந்தெடுப்பார்கள். இந்த நிகழ்வுகள் அனைத்தும் அந்தந்த ஊர் அளவிலேயே முடிந்துவிடும்.

 

ஆனால், தற்போது அந்தந்தக் கட்சிகளின் நிர்வாகிகள் ஊருக்குள் வந்து வேட்பாளர்களை தெரிவு செய்து, தங்கள் கட்சியின் வேட்பாளர்களாக அறிவித்து செல்லும் நிலையை பல இடங்களில் காண முடிகிறது.

 

தேர்தல்களில் வெற்றி பெற்ற பின்னர், பெரும்பாலானோர் வெளிப்படையாகவே கட்சி சார்பில் செயல்பட ஆரம்பித்து விடுகின்றனர். இதனால், கிராம ஊராட்சி நிர்வாகத்தில் பல்வேறு  சிக்கல்கள் எழுவதும், கிராமங்களுக்கு கிடைக்க வேண்டிய பல பலன்கள் கிடைக்காமல் போவதும் கண்கூடு.

 

ஊராட்சியால் நியமனம் செய்யக் கூடிய ஊராட்சி உதவியாளர், அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகர் போன்ற சில பணியிடங்களுக்கு ஆள்களை நியமனம் செய்வது முதல் பல்வேறு இடங்களிலும் அரசியல் நுழைந்துவிடுகிறது.

 

அதேபோல, ஒரு கிராம ஊராட்சிக்கு சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியைப்  பெறுவதிலும் சிக்கல்கள் எழுகின்றன. ஒரு கட்சியை சேர்ந்த எம்எல்ஏவோ, எம்பியோ, மாற்றுக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் தலைவராக உள்ள கிராம ஊராட்சிக்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்ய மறுப்பது போன்ற பாரபட்சமான செயல்பாடுகளை இன்று நடைமுறையில் வெகுவாகக் காண முடிகிறது.

 

இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது ஊராட்சி அலுவலகங்களில் காணப்படும் அரசியல் அடையாளம். ஊராட்சி அலுவலகம் என்பது பொதுக் கட்டடமே. ஆனால், பெரும்பாலான ஊராட்சி அலுவலகங்களின் வெளிப்புற முகப்பில் கொட்டை எழுத்துகளில் ஊராட்சித் தலைவரின் பெயர், அவர் சார்ந்திருக்கும் கட்சியின் நிறங்களில் எழுதப்பட்டிருக்கிறது.

 

கட்சி சார்பில் தேர்தல் நடைபெறும் நகராட்சி, பேரூராட்சி அலுவலகக் கட்டடங்களில்கூட, தலைவர்களின் பெயர்கள் கட்சி நிறங்களில் எழுதப்பட்டிருப்பதில்லை. ஆனால், கட்சி சார்பற்ற முறையில் தேர்தல் நடத்தப்படும் கிராம ஊராட்சிகளில் இந்த நிலை தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு வருகிறது.     

 

கிராம ஊராட்சிகளில் பெரும்பாலும் எல்லா அதிகாரங்களுமே ஊராட்சித் தலைவரிடமே உள்ளது. திட்டப் பணிகளுக்கான காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் தலைவர் மற்றும் துணைத் தலைவரிடம் உள்ளது. இவையெல்லாம் சமூக பங்கேற்பு, கிராமங்களை முன்னேற்றும் நோக்கத்தின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் அரசியல் கலக்கும்போது, நோக்கமே மாறிவிடுகிறது.

 

ஊராட்சியில் ஏதேனும் தீர்மானம் நிறைவேற்றுவது, நிதி தொடர்பான விவகாரங்களில் விவாதங்கள் உருவாகும் சூழல் போன்ற நிலைகளில் ஊராட்சித் தலைவர், தான் சார்ந்திருக்கும் கட்சியின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளின் கூற்றுக்கு ஏற்ப செயல்படும் நிலை உள்ளது. இதுபோன்ற கட்சி சார்ந்த தடைகளை ஏற்படுத்தும் போக்கு பல ஊராட்சிகளிலும் இருப்பதாக ஊராட்சித் தலைவர் ஒருவர் கூறுகிறார்.

 

என்ன செய்ய வேண்டும்: கிராம ஊராட்சிகளில் உள்ள கட்சி அடையாளங்கள் உடனடியாக நீக்கப்பட வேண்டும். எந்த வடிவத்திலும் ஊராட்சி அலுவலகங்களில் கட்சிகளின் அடையாளங்கள் இடம் பெறக் கூடாது என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும். கிராம ஊராட்சியின் நிர்வாகம், செயல்பாடுகள் அரசியல் சார்பின்றியே நடைபெறுகின்றன என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

 

அதேபோல, ஊராட்சிகளின் செயல்பாடுகளில் அரசியல் ரீதியிலான தலையீடு கூடாது எனத் தங்கள் கட்சியினருக்கு கட்சித் தலைமை அறிவுறுத்த வேண்டும். மேலும், கிராம ஊராட்சிப்  பிரதிநிதிகளும் கட்சி சார்பற்றுச் செயல்பட வேண்டும். அப்போதுதான், கிராம ஊராட்சி அமைப்புகள் உருவாக்கப்பட்டதன் நேக்கம் நிறைவேறும், கிராமங்களும் வளர்ச்சி பெற்று தன்னிறைவை எட்டும்.

 

வீ. தமிழன்பன் தினமணி