அரசு பள்ளிகளில் "ஸ்மார்ட் கிளாஸ்' திட்டம்: நடப்பு கல்வியாண்டில் துவக்கம்

19/08/2010 13:53

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த, "ஸ்மார்ட் கிளாஸ்' எனும் டிஜிட்டல் வகுப்பறை திட்டத்தை அறிமுகம் செய்ய, அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக 412 பள்ளிகளில், நடப்பு கல்வியாண்டு முதல் இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் உயர்ந்து வருகிறது. அனைவருக்கும் கல்வித் திட்டம் அறிமுகம் செய்துள்ள செயல் வழிக் கற்றல், படைப்பாற்றல் கல்வி ஆகிய கல்வி முறைகளால் ஈர்க்கப்பட்டுள்ள மாணவர்கள், பாடங்களை ஆனந்தமாகவும் சுதந்திரமாகவும் கற்கின்றனர். இந்த ஆண்டு முதல் சமச்சீர் கல்வி முறையும் அறிமுகமாகியுள்ளதால், கல்வித் தரம் நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது. இதனால், தனியார் பள்ளி மாணவர்களில் பலர் அரசுப் பள்ளிகளில் சேர்ந்து வருகின்றனர். அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் அடுத்த முயற்சியாக, வகுப்பறைகளில், "ஸ்மார்ட் கிளாஸ்' எனும் டிஜிட்டல் வகுப்பறை திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாநில இணை இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது: புத்தகத்தைப் பார்த்து பாடம் படிப்பதை விட, செயல் வழி மற்றும் "விஷுவல்' முறையில் படிப்பது அதிக பலன் அளிக்கிறது. வெளிநாட்டு பள்ளிகளில் இந்த திட்டம் மூலம் படிக்கும் மாணவர்கள் புத்திக்கூர்மையுடன் விளங்குகின்றனர். தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் விஷுவல் கல்வி வழங்கும் நோக்கத்துடன், "ஸ்மார்ட் கிளாஸ்' திட்டம் துவக்கப்படுகிறது.

 முதற்கட்டமாக, தமிழகம் முழுவதும் ஒன்றியத்துக்கு ஒரு பள்ளி வீதம் மொத்தம் 412 பள்ளிகளில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகளை நடத்த தேர்வு செய்யப்படும் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களுக்கும் முறையான பயிற்சி அளிக்கப்படும். சமச்சீர் கல்வி முறையுடன் இணைத்து பாடங்கள் கற்பிக்கப்படும். அனைத்து விஷயங்களும் இன்னும் ஓரிரு மாதங்களில் முடிவு செய்யப்பட்டு விடும். அதன் பின், நடப்பு கல்வியாண்டிலேயே இத்திட்டம் துவங்கப்படும். 412 பள்ளிகளில் இத்திட்டம் பெறும் வெற்றியின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் அனைத்து அரசு நடுநிலைப்பள்ளிகளில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தில் படித்து 10ம் வகுப்பு முடித்து வெளியேறும் மாணவன், கம்ப்யூட்டர் கல்வியில் ஆர்வமிக்கவனாக வெளியேறுவான். உயர்கல்வியில் கம்ப்யூட்டர் தொடர்பான துறைகளில் மிளிர, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இத்திட்டம் கைகொடுக்கும். இவ்வாறு கண்ணப்பன் கூறினார்.

கோவை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் கலைவாணி கூறுகையில், ""ஒன்றியங்களில் இத்திட்டத்தை செயல்படுத்தும் பள்ளிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. உள்கட்டமைப்பு வசதியின் அடிப்படையில் பள்ளி தேர்வு செய்யப்படும். இந்தியாவில் அரசுப் பள்ளிகளில் தமிழகத்தில் தான், "ஸ்மார்ட் கிளாஸ்' திட்டம் முதன் முறையாக அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் தமிழக அரசுப் பள்ளி மாணவர்களால், எதிர்காலத்தில் சர்வதேச அளவுக்கு அனைத்து துறைகளிலும் எளிதில் வெற்றி பெற முடியும்,'' என்றார்.

வகுப்பறைகள் "டிஜிட்டல் மயம்': திட்ட ஒருங்கிணைப்பாளர் கிருபா மனோன்மணி கூறுகையில், ""இத்திட்டம் தற்போதைய பாடத்திட்டத்தின்படி செயல்படுத்தப்படும். இதற்கான பாடங்கள், "இன்டர்ஆக்டிவ் போர்டில்' தயாரிப்பின்போதே புகுத்தப்படும். பாடம் தொடர்பான சந்தேகங்களுக்கு, மாணவர்களே திரையில் விடையை கண்டுபிடிக்க முடியும். ஜீரண மண்டலம் போன்ற பாடங்களை அசையும் படங்களுடன் வண்ணமயமாக சினிமா போல் திரையில் காண முடிவதால், பாடங்கள் எளிதில் மனதில் பதியும். தேர்வுக்கென தனியாக படிக்க வேண்டியதில்லை; அனைத்தையும் தமிழில் படிக்க முடியும் என்பது தான் இதன் சிறப்பு,'' என்றார். ""இத்திட்டத்தை அரசுப் பள்ளி வகுப்பறையில் துவக்குவதற்கான கம்ப்யூட்டர், "இன்டர்ஆக்டிவ் ஒயிட் போர்டு,' ஆம்பிளிபையர், எல்.சி.டி.புரொஜக்டர், டிஜிட்டல் கேமரா வாங்கப்படவுள்ளன. மைக்ரோசாப்ட், இன்டெல், எஜுகாம்ப் போன்ற நிறுவனங்களுடன் பேச்சு நடந்து வருகிறது,'' என இணை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார்.

https://www.dinamalar.com/News_Detail.asp?Id=65238