அருந்ததி ராய், கிலானி மீது வழக்கு பதிய நீதிமன்றம் உத்தரவு

27/11/2010 17:33

காஷ்மீர் பிரச்னை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த எழுத்தாளர் அருந்ததி ராய், ஹுரியத் கட்சி தலைவர் கிலானி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு தில்லி போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 

அக்டோபர் 21-ம் தேதி, காஷ்மீர் பிரச்னை தொடர்பாக தில்லியில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் கலந்துகொண்ட அருந்ததி ராயும், கிலானியும் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில், இதுதொடர்பாக சுஷில் பண்டிட் என்பவர் அக்டோபர் 28-ம் தேதி தில்லி போலீஸாரிடம் புகார் அளித்தார். ஆனால், அதன் மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது.

 

 

இதுதொடர்பான வழக்கு தில்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிபதி நவிதா குமாரி பகா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில், அருந்ததி ராய், கிலானி உட்பட 5 பேர் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தில்லி போலீஸாருக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். மேலும், இதுகுறித்த தகவலை ஜனவரி 6-ம் தேதி நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

dinmani.com