அருந்ததி ராய்க்கு மக்கள் சமூக உரிமைக் கழகம் ஆதரவு

29/10/2010 20:56

காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக எழுத்தாளர் அருந்ததி ராய் தெரிவித்த கருத்துக்களுக்காக அவர் மீது சட்டத்தைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று மக்கள் சமூக உரிமைக் கழகம் (பியுசிஎல்) கூறியுள்ளது.

இது தொடர்பாக பியுசிஎல் அமைப்பின் தலைமையகம் டெல்லியில் இருந்து விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “காஷ்மீர் பிரச்சனை மீது கருத்து தெரிவித்தமைக்காக அருந்ததி ராய் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று அரசைக் கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

அருந்ததி ராய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரும் அரசியல் தலைவர்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பியுசிஎல், இப்படிப்பட்ட தலைவர்களால்தான் காஷ்மீர் பிரச்சனை இந்த அளவிற்கு மோசமடைந்தது என்று சாடியுள்ளது.

“மதச்சார்ப்பற்ற, அமைதி விரும்பிகளாக இருந்த காஷ்மீர் மக்களை ஒரு அரசியல் மாற்றின் மூலம் அவர்களுக்கு நிரந்தர வாழ்க்கை அமைத்துக் கொடுத்திருக்கும் வாய்ப்பு இருந்தது. அதனை தவற விட்டுவிட்டார்கள்” என்று பியுசிஎல் கூறியுள்ளது.