அஸாமில் ரயில் தண்டவாளம் குண்டுவைத்து தகர்ப்பு - எஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டது

28/10/2010 14:16

அசாம் மாநிலத்தில் தண்டவாளத்தை தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்த்தனர்; இதைத் தொடர்ந்து அந்த வழியாக வந்த பராக் வேலி எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டது.

 

 அசாம் மாநிலத்தின் வட கச்சார் ஹில்ஸ் மாவட்டத்தில் காலவரையற்ற முழு அடைப்புக்கு திமா ஹலாம் டாவோகா (திலீப் நுனிசா) தீவிரவாத அமைப்பினர் அழைப்பு விடுத்திருந்தனர்.

 

 இந்த நிலையில் கச்சார் மாவட்டத்திலுள்ள லும்டிங் பகுதியிலிருந்து சில்சார் பகுதிக்கு பராக் வேலி எக்ஸ்பிரஸ் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12.20 மணிக்கு சென்றுகொண்டிருந்தது. அப்போது சரியாக 12.30 மணிக்கு லும்டிங் என்ற பகுதியில் தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியது.

 

 குண்டுவெடிப்பில் சுமார் 70 மீட்டர் தூரத்துக்கு தண்டவாளம் பெயர்ந்தது. ஹஃப்லாங் மற்றும் பகதார் ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது.

 

 இதைத் தொடர்ந்து அந்தத் தடம் வழியாக வந்த பராக் வேலி எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டது. ரயிலின் பின்பகுதியிலுள்ள டிராலி, 3 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கின.

 

 அதிருஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சம்பவம் அறிந்ததும் ரயில்வே அதிகாரிகளும், போலீஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

 

 கடைகள் அடைப்பு: தீவிரவாதிகள் விடுத்த முழு அடைப்பினால் கச்சார் மாவட்டத்திலுள்ள கடைகள், வர்த்தக வளாகங்கள் மூடப்பட்டன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. சாலையில் எந்த வாகனங்களும் ஓடவில்லை. இருந்தபோதும் திமா ஹசாவை மாவட்டத்தில் நடைபெற்ற ஜாதிங்கா சர்வதேச திருவிழா தங்குதடையின்றி நடந்தது. இந்தத் திருவிழாவை மாநில ஆளுநர் ஜே.பி. பட்நாயக் துவக்கிவைத்தார்.