ஆதாரத்தை அழித்த குற்றச்சாட்டில் நித்தியானந்தாவின் உதவியாளர் கைது

18/11/2010 14:44

 

பெங்களூர்: ஆதாரத்தை அழித்தது தொடர்பான புகாரின் பேரில்செக்ஸ் லீலையில் சிக்கிய நித்தியானந்தாவின் உதவியாளரை பெங்களூர் பொலிஸார் கைது செய்தனர்.

நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருந்தது தொடர்பான வீடியோ வெளியாகி நித்தியானந்தாவை பெரும் சிக்கலில் ஆழ்த்தியது. அவர் பெங்களூரை விட்டு தப்பியோடித் தலைமறைவானார். நீண்ட தேடுதலுக்குப் பின்னர் அவரை இமாச்சலப் பிரதேசத்தில் வைத்து கர்நாடக பொலிஸார் கைது செய்தனர். இருப்பினும் நடிகை ரஞ்சிதா மட்டும் இதுவரை சிக்கவே இல்லை. அவரைப் பொலிஸார் தேடிக் கொண்டேயிருக்கின்றனர். நித்தியானந்தா மீது பாலியல்வல்லுறவு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த நிலையில், நித்தியானந்தா வழக்குத் தொடர்பான ஆதாரங்களை அழித்ததாகக் கூறி நித்தியானந்தாவின் உதவியாளரான சச்சிதானந்தாவை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இது குறித்து கர்நாடக சி.ஐ.டி. பொலிஸார் கூறுகையில்;ஆதாரங்களை அழித்தது தொடர்பாகவும் கிரிமினல் சதித் திட்டத்தில் ஈடுபட்டதற்காகவும் சச்சிதானந்தா கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.

பெங்களூர் பிடதி ஆசிரமத்தில் முக்கிய புள்ளி இந்த சச்சிதானந்தா. நித்தியானந்தாவிடம் சிஷ்யர்களாக சேர்ந்தவர்களிடம் கட்டாயப்படுத்தி சில உறுதிமொழிகளை எழுதி வாங்கினார் நித்தியானந்தா என்பது ஒரு புகார். அந்தப் புகாருக்கு ஆதாரமாக விளங்கிய அந்த உறுதிமொழிப் பத்திரங்களை சச்சிதானந்தா அழித்துள்ளதாகவே தற்போது அவர் கைதாகியுள்ளார்.நித்தியானந்தா,ரஞ்சிதா விவகாரம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியபோது இந்த சச்சிதானந்தாதான் பத்திரிகையாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார். ஆந்திராவைச் சேர்ந்தவர் சச்சிதானந்தா. 2003 ஆம் ஆண்டு சிகாகோவில் வைத்து நித்தியானந்தாவைச் சந்தித்து அவருடன் இணைந்து கொண்டார்.

thinakkural.com