ஆர்எஸ்எஸ் தலைவர்களை தொடர்புபடுத்த சிபிஐ-யை தவறாகப் பயன்படுத்துகிறது மத்திய அரசு: அத்வானி

11/11/2010 20:45

பயங்கரவாத தாக்குதல் வழக்கில் ஆர்எஸ்எஸ் தலைவர்களை தொடர்புபடுத்துவதற்காக சிபிஐ-யை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்தி வருகிறது என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கூறினார்.

 

 

தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு அத்வானி பேசியதாவது:

 

மத்திய அரசு ஊழல்களில் சிக்கியுள்ளது. 2ஜி அலைக்கற்றை, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி, ஆதர்ஷ் வீட்டுவசதி குடியிருப்பு என பல ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

 

 

காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஏற்பாடுகளில் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது. விளையாட்டு போட்டி நடைபெற்றால் போட்டியின் சாதனைகள் குறித்துதான் போட்டியை நடத்திய நாட்டில் பேசப்படும். ஆனால் இங்கு கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததுதான் பேசப்படுகிறது.

 

 

இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி பதக்கங்களை குவித்தபோதும், ஊழல் கறையை நாம் கழுவ முடியாமல் போய்விட்டது.

 

தில்லி அரசு, மத்திய அமைச்சகங்கள், விளையாட்டு அமைச்சகம், மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம், போட்டிக்கான அமைச்சர்கள் குழு ஆகியோர் இந்த ஊழல் வடத்தில்சிக்கியுள்ளனர்.

 

 

ஊழல், காஷ்மீர் விவகாரத்துடன் துவங்கியுள்ளது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்.

 

பயங்கரவாதிகள் தாக்குதல் வழக்கில் ஆர்எஸ்எஸ் தலைவர்களை தொடர்புபடுத்துவதற்காக சிபிஐ தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது கண்டிக்கத்தக்கது.

 

 

ஆதர்ஷ் வீட்டுவசதி குடியிருப்பு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரிக்கவேண்டும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி பரிந்துரைத்துள்ளார். ஆனால் சிபிஐ மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை.

 

 

அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக மட்டுமே சிபிஐ பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரசியல் கட்சிகள், சமூக சேவகர்கள், அரசியல் அமைப்புகள் மீது பொய் வழக்குகளைப் போட்டு அவர்களின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தவே சிபிஐ பயன்படுத்தப்படுகிறது.

 

 

இதேபோலத்தான் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் மீது வழக்கு போடப்பட்டு உள்ளது என்றார் அவர்.

 

2ஜி அலைக்கற்றை, ஆதர்ஷ் வீட்டு வசதி குடியிருப்பு விவகாரம்,காமன்வெல்த் ஊழல்தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த கோரிக்கை  விடுக்கவேண்டும் என்று நாடாளுமன்ற பாஜக உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

 

இத்தகவலை மாநிலங்களவை பாஜக துணைத் தலைவர் எஸ்.எஸ். அலுவாலியா தெரிவித்தார்.

 

தினமணி