ஆளில்லா விமானம் மூலம் ஆப்ரிக்காவில் தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம்

23/09/2011 14:46

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்கும் அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதல் நடவடிக்கைகள் தற்போது ஆப்ரிக்காவிலும், அரபு தீபகற்பத்திலும் விரிவாக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அமெரிக்காவில் இருந்து வெளிவரும் "வாஷிங்டன் போஸ்ட்" பத்திரிகைச் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது: பயங்கரவாத அமைப்பான அல் ஷபாப்பை எதிர்கொள்ள எத்தியோப்பியாவில் அமெரிக்க ராணுவ தளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடலில் உள்ள செஷல்ஸ் தீவில் அமைக்கப்பட்டுள்ள தளத்தில் இருந்து இம்மாத துவக்கத்தில் பரிசோதனை முயற்சிகள் நடந்தன.

விரைவில் அத்தளத்தில் இருந்து சோமாலியா மீது ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்படும். பாகிஸ்தானில் அல்கொய்தா பலவீனம் அடைந்த பின் ஏமன், சோமாலியாவில் தீவிரவாதம் பரவி வருவதால் அமெரிக்கா இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

சமீபத்தில் அமெரிக்காவுக்கான செஷல்ஸ் தூதர், ரொனால்டு ஜூமி, அமெரிக்காவின் ராணுவ தளம் தங்கள் நாட்டில் அமைவதை வரவேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

newsonews.com