ஆஸ்திரேலியா முன்னால் பிரதமர் ஜோன் ஹாவர்ட் மீது ”சூ” வீச்சு

27/10/2010 14:47

தொலைக்காட்சி நேரடி நிகழ்வொன்றில் கலந்து கொண்ட ஆத்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஜோன் ஹவார்ட் மீது பார்வையாளர் ஒருவர் தனது பாதணிகளை வீசிய சம்பவம் நேற்று இடம்பெற்றது. ஈராக் போரில் ஹவார்டினது ஈடுபாடு காரணமாகவே இத்தாக்குதலை மேற்கொண்டதாக அந்நபர் கூறினார்.


 

ஈராக் போர் குறித்த கேள்விகளுக்கு பார்வையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து முடித்த போது பீட்டர் கிரே என்ற அந்த நபர் "ஈராக்கின் இறப்புகளுக்கு இது" எனக்கூறி தான் அணிந்திருந்த இரண்டு காலணிகளையும் கழற்றி ஹவார்ட் மீது எறிந்தார். இது நேரடியாக ஏபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.


அந்நபர் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். “ஜோன் ஹவார்ட் இதனை விட கடுமையான தண்டனை அனுபவிக்கவேண்டும்,” என அவர் மேலும் கூறினார்.


2008 ஆம் ஆண்டு ஈராக்கில் இடம்பெற்ற இதே போன்ற சம்பவம் ஒன்றில் அன்றைய அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் மீது செய்தியாளர் ஒருவர் பாதணிகளை எறிந்தமை இங்கு நினைவுகூரத்தக்கது.


நேற்றைய சம்பவத்தில் வேறொரு பார்வையாளர் ஹவார்டை நோக்கி "உனது கைகளில் இரத்தம் தோய்ந்துள்ளது", என்று கூறியவாறே அங்கிருந்து வெளியேறினார்.

ta.wikipedia.org