இங்கிலாந்தில் பாதி இதயத்துடன் உயிர் வாழும் அதிசய குழந்தை

10/09/2012 18:16

இங்கிலாந்தில் 41/2 மாத பெண் குழந்தை ஒன்று, பாதி இதயத்துடன் உயிர் வாழ்வது தற்போது தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தின் கிளாஸ்கோ நகரை சேர்ந்தவர் பீட்டர்(வயது 30). இவரது மனைவி நிகோலா(வயது 28). பள்ளி ஆசிரியையான நிகோலாவுக்கு, 2 குழந்தைகள் உள்ளனர்.

மூத்தவன் நதானியல்(வயது 2). இரண்டாவதாக பெண் குழந்தை ஸ்கார்லட் டாகன் பிறந்து நான்கரை மாதங்கள் ஆகின்றன.

இந்நிலையில் ஸ்கார்லட் டாகனுக்கு திடீர் திடீரென மூச்சு வாங்க ஆரம்பித்தது. உடனே இடைவிடாமல் அழுவாள். இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருப்பாள்.

நரக வேதனையில் அவள் துடிப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நிகோலா மகளை யார்க்ஹில் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

குழந்தை ஸ்கார்லட்டை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவளது இதயம் அரைகுறையாக வளர்ந்திருப்பதை கண்டுபிடித்தனர்.

அதன் பின் ஸ்கார்லட்டுக்கு ஹைப்போபிளாஸ்டிக் ரைட் ஹார்ட் சிண்ட்ரோம் என்ற பாதிப்பு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவளது இதயத்தின் வலது பக்கம் முழுமையாக வளர்ச்சி அடையவில்லை.

பாதி இதயம் மட்டுமே இருப்பதால், நுரையீரலுக்கு போதுமான ரத்தத்தை பம்ப் செய்து அனுப்ப முடியாது. இதனால் அத்தகைய குழந்தைகள் சில நாட்களிலேயே இறந்துவிடும். ஆனால் நாலரை மாதமாக ஸ்கார்லட் பிழைத்திருப்பது ஆச்சரியம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கர்ப்ப காலத்தின் 22-வது வாரத்தில் ஸ்கேன் செய்யும் போது இந்த குறைபாடு தெரிந்துவிடும். நிகோலாவை பரிசோதித்த மருத்துவர் எப்படி கவனிக்காமல் விட்டார் என்பது தெரியவில்லை.

இதையடுத்து, குழந்தை ஸ்கார்லட்டுக்கு 2 அறுவைசிகிச்சைகள் செய்யப்பட்டன. நுரையீரலுடன் ரத்தக் குழாய்களை நேரடியாக இணைத்த பின், தற்போது இதயம் பம்ப் செய்யாமலேயே நுரையீரலுக்கு ரத்தம் ஓட்டம் கிடைத்து வருகிறது.

அதனால் திணறல் இல்லாமல் அவள் தற்போது மூச்சு விடுகிறாள். தற்போது ஸ்கார்லட் நலமுடன் இருக்கிறாள். ஆனால் கடுமையான விளையாட்டுகள், மூச்சு வாங்கும் பயிற்சிகள் போன்றவற்றில் அவள் ஈடுபடவே கூடாது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

பதின் வயதை அடையும் போது, இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டியது அவசியம் என்றும் கூறியுள்ளனர்

https://www.newsonews.com