இங்கிலாந்து காவல்துறையிடம் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாங்கா சரண்டைந்தார்

07/12/2010 17:22

சுவீடன் நாட்டில் தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட பாலியல் அத்துமீறல் வழக்குத் தொடர்பாக தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் நிறுவனர் ஜூலியன் அசாங்கா இன்று இங்கிலாந்து காவல்துறையினரிடம் சரணடைந்தார்.

இங்கிலாந்து நேரப்படி இன்று காலை 9.30 மணிக்கு ஜூலியன் அசாங்கா சரணடைந்ததாகவும், அவர் இன்று மாலைக்குள் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என்றும் பிரிட்டன் செய்திகள் தெரிவிக்கின்றன.
விக்கிலீக்ஸ் இணையத் தளத்தை துவக்கிய ஆஸ்ட்ரேலியரான ஜூலியன் அசாங்கா, உலக நாடுகளின் இரகசிய முகங்களை வெளிப்படுத்தும் பல ஆவணங்களை தனது இணையத் தளத்தில் வெளியிட்டுவந்தார். இது அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள், தங்கள் நாட்டின் ‘பெரும’க்கும் பாதுகாப்பிற்கும் எதிரானது என்று கூறி விக்கிலீக்ஸ் இணையத்தளத்தை முடக்க முற்பட்டன.

இரண்டு நாட்களுக்கு முன்னர் விக்கிலீக்ஸ் இணையத்தளம் முடக்கப்ட்டது. ஆனால், 6 மணி நேரத்தில் புதிய முகவரியுடன் விக்கிலீக்ஸ் உயிர் பெற்றது. அதன் பிறகும் பல இரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில்தான், தங்களிடம் ஜூலியன் அசாங்கா பாலியல் அத்துமீறல் செய்ததாகக் கூறி இரண்டு பெண்கள் சுவீடனில் புகார் அளிக்க, அதனடிப்படையில் அசாங்காவை கைது செய்ய பன்னாட்டு காவல் படை (இண்டர்போல்) அவருக்கு எதிராக சிகப்பு எச்சரிக்கை விடுத்தது.

இதனைத் தொடர்ந்து தனது வழக்கறிஞர் வாயிலாக பிரிட்டன் காவல் துறையினரை தொடர்பு கொண்ட அசாங்கா, இன்று சரண்டைந்துள்ளார். ஆயினும், தனது இணையத் தளத்தில் தொடர்ந்து இரகசிய ஆவணங்கள் வெளியிடப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

webdunia.com