இந்தியா வளமாக உள்ளது; இந்தியர்கள் வறுமையில் வாடுகின்றனர்: மணிசங்கர்

02/12/2010 20:39

இந்தியா வளமாக உள்ளது. ஆனால் இந்தியர்கள் வளமாக இல்லாமல் வறுமையில் வாடுகின்றனர் என்று மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் ஐயர் கூறியுள்ளார்.

 

 ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக புத்தக வெளியீட்டகத்தின் சார்பில் "இந்தியாவில் சமூக முன்னேற்றம்' குறித்த அறிக்கை தில்லியில் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணிசங்கர் ஐயர் பேசியது: "நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கணக்கிடும் அரசின் அளவுகோல் சரியானதாக இல்லை. நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜி.டி.பி.) 57 சதவீதம் 1 சதவீத மக்களுக்கு மட்டுமே பயனளிக்கிறது.

 

 ஆனால் ஜி.டி.பி. அடிப்படையில்தான் தனிநபர் வருமானம் கணக்கிடப்படுகிறது. இது பெரும்பான்மையான மக்களின் உண்மை பொருளாதார நிலையை பிரதிபலிப்பதில்லை. எனவே நாட்டு மக்கள் வறுமையில் வாடினாலும்கூட ஜி.டி.பி. அடிப்படையில் இந்தியா வளமாக உள்ளதாகவே தெரிவிக்கப்படுகிறது.

 

 இது மிகவும் ஆபத்தானது. இந்தியாவில் வறுமைக் கோட்டை கணக்கிடும் முறையிலும் தெளிவு இல்லை. ஜி.டி.பி. என்பதே இந்திய மக்களின் உண்மையான எதிரியாக உள்ளது. ஜி.டி.பி., தனிநபர் வருமான கணக்கீடு, தேசிய வறுமைக் கோட்டு அளவுகோல் நிர்ணயம் ஆகியவை இந்திய மக்களின் வறுமையை மறைத்து வளமாகக் காட்டுகின்றன. இவை மூன்றும் நாட்டுக்கு மிகப் பெரிய ஆபத்தாகும்' என்றார் மணிசங்கர் ஐயர். dinamani.com