இந்தியாவின் அழுக்கான மெட்ரோ, தமிழகத்தின் அழுக்கான நகரங்கள் : பரபரப்பான சர்வே முடிவுகள்

09/09/2010 10:37

ஒரு நகரத்தில் உள்ள கழிவிட வசதி, குடிநீர் தரம், சாக்கடை வசதி போன்ற 19 விஷயங்களை வைத்து ஆய்வு செய்து முதல் முறையாக பட்டியல் வெளியிட்டுள்ளது மத்திய அரசு. 1 இலட்சத்திற்கும் அதிகமான மக்களை கொண்ட 423 நகரங்களில் நடைபெற்ற ஆய்வில் மெட்ரோக்களில் மும்பையும் கடலூர், திருவொற்றியூர், தூத்துக்குடி, திண்டுக்கல் போன்றவை தமிழகத்தில் அப்பெருமையை (?) பெற்றுள்ளன.

ஒவ்வோர் நகரத்தின் சுகாதார வசதிகளை பொறுத்து பச்சை, நீலம், கறுப்பு, சிகப்பு என தர வரிசைப்படுத்தியுள்ளது அரசு. ஒரு நகரம் கூட பச்சை தரம் பெறவில்லை. அது போல் சண்டிகர், மைசூர், சூரத் உள்ளிட்ட 4 நகரங்கள் மாத்திரமே நீல தரத்தை பெற்றுள்ளன. மீதமுள்ள நகரங்கள் அனைத்தும் கறுப்பு மற்றும் சிகப்பு தரத்தை பெற்றுள்ளது சுகாதரத்துக்கு உள்ள மதிப்பை எடுத்து காட்டுகிறது.                                                 

இதர மெட்ரோக்களான தில்லி 5வது இடத்திலும், பெங்களூர், சென்னை முறையே 12 மற்றும் 13வது இடத்தில் உள்ளன. கொல்கத்தா 25வது இடத்திலும் உள்ளன. தமிழகத்தை பொறுத்த வரை திருச்சி முதலாவதாக 5வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆலந்தூர், தஞ்சாவூர், நெய்வேலி போன்றவை முறையே 20,26,31 வது இடத்திலும் திருநெல்வேலி, தாம்பரம் , பல்லாவரம் போன்றவை அடுத்தடுத்து 38,39,40 வது இடத்திலும் உள்ளது.

நாகர்கோவில் 53வது இடத்திலும் ஈரோடு 60வது இடத்திலும் உள்ளது. கோவை மற்றும் மதுரை 92 மற்றும் 99வது இடத்தில் உள்ளது. அது போல் கடைசி இடங்களில் அம்பத்தூர் 235வது இடத்திலும் கடலூர் 254வது இடத்திலும் திருவொற்றியூர் 264வது இடத்திலும், திண்டுக்கல், தூத்துகுடி 276 மற்றும் 284வது இடத்திலும் உள்ளன. தமிழகத்தில் கடைசி இடம் பெற்றுள்ள தூத்துக்குடியை விட மோசமான நிலையில் 129 நகரங்கள் இந்தியாவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.