இந்தியாவின் ஆளில்லா ருஸ்தம் உளவு விமானம் வெற்றிகரமாக சோதனை

18/10/2010 16:39

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆளில்லாத ருஸ்தம் உளவு விமானம் வெற்றிகரமாக ஏவி சோதனை செய்யப்பட்டது.

 பெங்களூரில் உள்ள தனேஜா விமானதளத்திலிருந்து சனிக்கிழமை இந்த ஆளில்லாத உளவு விமானம் விண்ணில் செலுத்தப்பட்டது.

 தரைக் கட்டுப்பாட்டு தளத்திலிருந்து விமானத்தின் பைலட் இந்த விமானத்தை இயக்கி வெற்றிகரமாக சோதனை நடத்தினார்.

சுமார் 3 ஆயிரம் அடி உயரம் வரை சென்ற இந்த விமானம் சுமார் அரை மணி நேரம் வானில் வட்டமிட்டபிறகு திட்டமிட்டபடி பத்திரமாக தரையிறங்கியது. விமானம் பறந்தபோது சோதனைகள் அனைத்தையும் வெற்றிகரமாக முடித்தது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் துணை நிறுவனமான "டீல்' இந்த விமானத்துக்கான தகவல் தொகுப்புகளை தயாரித்துள்ளது. கோவையில் உள்ள ஜெப்ஹைர் ஏரோஸ்பேஸ் நிறுவனம் இந்த விமானத்துக்கான பிரதான பாகங்களைத் தயாரித்துள்ளது.

முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆளில்லாத போர் விமானம் சுமார் 25 ஆயிரம் அடி உயரம் வரை பறக்கும் வகையில் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் 75 கிலோ எடையுள்ள பொருள்களுடன் வானில் 12 முதல் 15 மணி நேரம் வரை பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முப்படைகளும் இந்த விமானத்தை பயன்படுத்தலாம். போர்க் காலங்களில் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத இடங்களில் பயன்படுத்துவதற்கு இந்த விமானம் பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி