இந்தியாவுக்கான சிறப்புப் பிரதிநிதியாக டத்தோ சாமிவேலு நியமனம்

14/12/2010 10:33

இந்தியா, தெற்கு ஆசிய நாடுகளுக்கான மலேசியாவின் சிறப்பு பிரதிநிதியாக டத்தோ சாமிவேலு (74) நியமிக்கப்பட்டுள்ளார்.

 

மலேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக 30 ஆண்டுகளுக்கு மேல் பதவி வகித்து வந்த டத்தோ சாமிவேலு, சில தினங்களுக்கு முன்னர் பதவியை ராஜிநாமா செய்ததுடன் தீவிர அரசியலில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

 

அவர் தீவிர அரசியலில் இருந்து ஓய்வுபெற்றதுமே இந்தியா, தெற்கு ஆசிய நாடுகளின் சிறப்பு பிரதிநிதியாக அவரை அந்நாட்டு பிரதமர் நஜீப் ரஸôக் நியமித்துள்ளார்.

 

டத்தோ சாமிவேலுவின் வாழ்க்கை வரலாறு குறித்து "ஏ லைப், ஏ லெஜெண்ட், ஏ லெகசி' என்ற தலைப்பிலான புத்தக வெளியீட்டு விழா கோலாலம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் புத்தகத்தை வெளியிட்டு பேசிய நஜீப், சாமிவேலுவை இந்தியாவுக்கான சிறப்பு பிரதிநிதியாக நியமித்துள்ளதை அறிவித்தார்.

 

மேலும் அவர் ஆற்றிய உரை: சாமிவேலு திறமைமிக்க அரசியல் தலைவர். அவரது அறிவையும்,திறமையையும் நாம் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால்தான் அவருக்கு முக்கியமான பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா, தெற்கு ஆசிய நாடுகளுடனான உள்கட்டமைப்பு திட்டப் பணிகளில் அவர் அதிக கவனம் செலுத்துவார். வரும் காலத்தில் சாமிவேலு எடுக்கும் நடவடிக்கை மூலம் ஏராளமான உள்ளூர் நிறுவனங்கள் பயன்பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

 

மலேசியாவில் வாழும் இந்தியர்கள் நலனில் அதிக அக்கறை கொண்டவர் சாமிவேலு. அமைச்சரவை கூட்டத்தின் போதெல்லாம் இந்தியர்கள் நலன் குறித்து அவர் கேள்வி எழுப்பாமல் இருந்ததில்லை. அரசியல் வாழ்விலும் சரி, தனிப்பட்ட வாழ்விலும் சரி பழகுவதற்கு இனிமையானவர் என்றார்.

 

மலேசிய காங்கிரஸ் தலைவராக இருந்த மாணிக்கவாசகம் காலமானதை அடுத்து, அக்கட்சியின் தலைவராக (பொறுப்பு) செப்டம்பர் 13, 1979-ல் டத்தோ சாமிவேலு பொறுப்பேற்றுக் கொண்டார். இப்பதவியை சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் வகித்து வந்த சாமிவேலு சில நாள்களுக்கு முன் ராஜிநாமா செய்தார்.

dinamani.com