இந்தியாவுக்கு ஒபாமா வருகை: 4 நாள் செலவு ரூ.3,600 கோடி

03/11/2010 12:55

 

 

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வருகையை முன்னிட்டு அமெரிக்க அரசு ஒரு நாளைக்கு ரூ. 900 கோடி செலவு செய்ய உள்ளது.

அமெரிக்க அதிபர் ஒபாமா, வருகிற சனிக்கிழமை முதல் 4 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கிறார். ஒபாமாவின் வருகையையொட்டி, மும்பையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஒபாமாவுடன், உயர் அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் உளவு பிரிவு போலீசார் உள்ளிட்ட 3 ஆயிரம் பேர் இந்தியா வருகிறார்கள்.

அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் இருந்து அதிகாரிகள் மற்றும் ரகசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஏற்கனவே கடந்த ஒரு வாரமாக மும்பையில் முகாமிட்டு உள்ளனர். கப்பல், ஹெலிகாப்டர்கள் மற்றும் அதி நவீன பாதுகாப்பு கருவிகளும் வரவழைக்கப்பட்டு உள்ளன.

ஒபாமா வருகையின்போது பாதுகாப்பு, தங்குமிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்காக ஒரு நாள் செலவு ரூ.900 கோடி வரை ஆகும் என்று, மராட்டிய மாநில உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


ஒபாமாவுடன் செல்லும் மெய்க்காப்பாளர்களை தவிர மற்ற அமெரிக்க அதிகாரிகள் ஆயுதம் வைத்திருக்க அனுமதி இல்லை என்றும், மாநில போலீசார்தான் பாதுகாப்பு மற்றும் ஒபாமா வாகன அணிவகுப்பு வரிசை கண்காணிப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வார்கள் என்றும் அவர் கூறினார்.

nakkheeran.in