இந்து மாணவருக்கு 'சுன்னத்' செய்வித்ததாக முஸ்லிம் சிறு வணிகர் மீது புகார்

03/10/2010 17:03

தூத்துக்குடியில் தங்கி கூலி வேலை செய்து வருபவர்  ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியை சேர்ந்த வலம்புரி. இவர்   மகன் முருகேசன். வயது 17. இவர் தம் உறவினரான  முருகன் என்பவர்  வீட்டில் தங்கி, ஏர்வாடியில் உள்ள ஒரு பள்ளியில் மேல்நிலை முதலாமாண்டு படித்து வருகிறார்.

முருகேசன் இப்போது காலாண்டு விடுமுறையையொட்டி, ஏர்வாடியிலேயே புதுக்கோட்டையைச் சேர்ந்த இராவுத்தர் - வயது 30 - என்பவரது சூப் கடையில் வேலை செய்து வருகிறார்.

முஸ்லிம்களைப் போல தானும் சுன்னத் செய்துக்கொள்ள விரும்பிய மாணவர் முருகேசன் தனது விருப்பத்தை தன் முதலாளி இராவுத்தரிடம் தெரிவித்துள்ளார். அதனை ஏற்றுக்கொண்ட இராவுத்தர், முருகேசனுக்கு மாலை அணிவித்து, தப்ஸ் முழக்கத்துடன்  நேற்று ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளார். அதன்பின்  முருகேசனை தனது வீட்டுக்கு அழைத்து வந்த இராவுத்தர், சுன்னத் செய்பவரை வைத்து முருகேசனுக்குச் சுன்னத் செய்து வைத்துள்ளார்.  இந்தத் தகவலறிந்த மாணவரின் உறவினர் முருகன் என்பவர், ராவுத்தர் வீட்டுக்குச் சென்று சுன்னத் செய்யப்பட்ட நிலையில் இருந்த முருகேசனைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரும் மற்ற உறவினர்களும் ராவுத்தரை பிடித்து ஏர்வாடி இன்ஸ்பெக்டர் தங்கதுரையிடம் ஒப்படைத்து புகார் செய்தனர். தூத்துக்குடியில் உள்ள மாணவரின் பெற்றோருக்கும்  தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கீழக்கரை காவல்துறை துணை கண்காணிப்பாளர் பெருமாள் ராமானுஜம் மாணவரிடம் விசாரணை நடத்தினார். "இது என்னுடைய சுய விருப்பத்தின்படி நடந்தது. பெற்றோர்கள் ஒப்புதல் அளிக்க மாட்டார்கள் என்ற காரணத்திற்காக யாரிடமும் தெரிவிக்காமல் சுன்னத் செய்து கொள்ள சம்மதித்தேன்" என்பதாக  மாணவர் முருகேசன் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

Inneram