இந்தோனேசிய பூகம்பம், சுனாமி மற்றும் எரிமலை வெடிப்பு பலர் உயிரிழந்தனர்

27/10/2010 09:26

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுப் பகுதியை ஒட்டிய கடற்பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட பூகம்பத்தின் விளைவான ஆழிப்பேரலைத் (சுனாமி) தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயரிழந்துள்ளனர், 500க்கும் அதிகமானோர் காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

இந்திய நேரப்படி நேற்று இரவு 8.12 மணிக்கு சுமத்ரா தீவை ஒட்டிய கடற்பகுதியிலுள்ள வட பகாய், தென் பகாய் ஆகிய தீவுகளுக்கு இடையிலான கடற்பகுதியில் 20 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு பெரும் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரஅளவுகோலில் 7.7 புள்ளிகளாக பதிவாகியுள்ள கடுமையான பூகம்பம் ஆகும்.

இந்த பூகம்பம் ஏற்பட்டவுடனேயே ஆழிப்பேரலை தாக்கும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அவ்வாறு இருந்தும், பூகம்பம் ஏற்பட்ட இடத்திற்கு அருகிலிருக்கும் இரண்டு தீவுகளிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மெண்டாவாய் தீவிலிருந்த 10 கிராமங்களை ஆழிப்பேரலை அடித்துச் சென்றுவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.இதுவரை 108 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 500க்கும் அதிகமானோர் காணவில்லை என்ற தகவலை மட்டும் இநதோனேஷிய அரசு கொடுத்துள்ளது.

பூகம்பத்தைத் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் மீட்புப் பணிகள் தொய்வடைந்துள்ளதெனவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ளோரை அனுப்பப்பட்ட ஹெலிகாப்டர்கள் தரையிறங்க முடியாமல் திரும்பியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

3 மீட்டர் உயரமுடைய ஆழிப்பேரலை படாங் நகரைத் தாக்கியதாகச் செய்திகள் கூறுகின்றன. பூகம்பம் ஏற்பட்ட பகுதிக்கு அருகிலிருந்த வட, தென் பகாய் தீவுகளில் பெரும் அழிவு ஏற்பட்டிருக்கும் என்று அஞ்சப்படுகிறது. தென் பகாய் தீவுகளில் இருந்த 200 பேரில் 40 பேர்தான் மீட்கப்பட்டுள்ளனர். 160 பேரை காணவில்லை என்று அரசு தெரிவித்துள்ளது.

Webdunia.com

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் மெராப்பி எரிமலை வெடித்ததில் உயிரிழப்புகள் 25 ஐத் தாண்டியதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தூசுப் படிவுகள் தற்போது குறைந்து காணப்பட்ட போதிலும், மேலும் வெடிப்புகள் இடம்பெறச் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக கூறுகின்றனர்.


செவ்வாயன்று பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறினர். எரிமலையில் இருந்து கிளம்பிய தூசு நிலமெங்கும் வெண்ணிறமாகக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பலர் வீடுகளை விட்டு வெளியேற மறுத்து வருவதாகவும், இதனால் இறப்போரின் எண்ணிக்கை அதிகமாகலாம் எனவும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் மீண்டும் தமது வீடுகளை நோக்கி வருவதற்கு எத்தனிப்பதாக அங்கு சென்றுள்ள பிபிசி நிருபர் தெரிவித்தார். பல விவசாயிகள் தமது கால்நடைகளைப் பற்றி கவலை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


பல வீடுகளும் கால்நடைகளும் சூடான முகில் கூட்டங்கள் காரணமாக எரிந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் நிருபர் தெரிவிக்கிறார்.


1930 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பெரும் எரிமலை வெடிப்பை அடுத்து 13 கிராமங்கள் அழிந்தன. ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

 

www.ta.wikipedia.org