இரு கடல்களுக்கிடையே தடுப்பு, உதிக்கும் பல திசைகள், மனிதர்களால் குறையும் பூமி...(வரு முன் உரைத்த இஸ்லாம்)

16/10/2012 19:26

12 இரு கடல்களுக்கிடையே தடுப்பு

திருக்குர்ஆன் பல இடங்களில் இரண்டு கடல்கள் சங்கமமாகும் இடத்தில் அவ்விரண்டுக்கும் இடையே ஒரு பலமான தடையையும், தடுப்பையும் ஏற்படுத்தியிருப்பதாகக் கூறுகிறது. (நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) பூமியை வசிப்பிடமாக்கி, அவற்றுக்கிடையே ஆறுகளை உருவாக்கி அவற்றுக்கு முளைகளையும் அமைத்து இரண்டு கடல்களுக்கிடையே தடுப்பையும் ஏற்படுத்தியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? இல்லை! அவர்களில் அதிகமானோர் அறிவதில்லை. திருக்குர்ஆன் 27:61
 
இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் ஏற்படுத்தியுள்ளான். இரண்டுக்குமிடையே ஒரு திரை உள்ளது. ஒன்றையொன்று கடக்காது. திருக்குர்ஆன் 55:19,20
 
கடல் பற்றி ஆய்வு செய்பவர்கள் ஆராய்ச்சி செய்து இரு கடல்கள் சங்கமமாகும் இடங்களில் இரண்டு தண்ணீரும் சுவையிலும், அடர்த்தியிலும், உப்பின் அளவிலும் வேறுபட்டிருப்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.
 
பிரஞ்சு நாட்டைச் சேர்ந்த கடல் இயல் ஆய்வாளர் ஜேக்கூஸ் கோஸ்டோ என்பவர் ஆராய்ந்து இரண்டு கடல்களுக்கிடையே தடுப்பு இருப்பதை முதலில் கண்டறிந்தார்.
 
இது எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபிக்கு 14 நூற்றாண்டுகளுக்கு முன் எப்படித் தெரியும்? எனவே திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை தான் என்பதற்கு இதுவும் சான்றாக இருக்கிறது.

13 உதிக்கும் பல திசைகள்

சாதாரணமாக திசைகளைப் பற்றி பேசும் போது கிழக்கு மேற்கு என்று ஒருமையில் தான் குறிப்பிடுவர். ஆனால் திருக்குர்ஆன் இரண்டு கிழக்குகள் இரண்டு மேற்குகள் எனவும் பல கிழக்குகள் பல மேற்குகள் எனவும் பயன்படுத்தியுள்ளது.
 
(அவன்) வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றுக்கு இறைவன். கிழக்குகளுக்கும் இறைவன். திருக்குர்ஆன் 37:5
 
(அவன்) இரண்டு கிழக்குத் திசைகளுக்கும் இறைவன். இரண்டு மேற்குத் திசைகளுக்கும் இறைவன். திருக்குர்ஆன் 55:17
 
கிழக்குகளுக்கும், மேற்குகளுக்குமுரிய இறைவன் மேல் ஆணையிடுகிறேன். அவர்களை விடச் சிறந்தோரைப் பகரமாக்கிட நாம் ஆற்றலுடையவர்கள். நாம் தோற்போர் அல்லர். திருக்குர்ஆன் 70:40
 
'இரண்டு கிழக்குகள் இரண்டு மேற்குகள்' என்ற சொற்றொடரும் 'பல கிழக்குகள் பல மேற்குகள்' என்ற சொற்றொடரும் இந்தப் பூமி உருண்டை என்பதற்குத் தெளிவான சான்றாக அமைந்துள்ளது. பூமி தட்டையாக இருந்தால் சூரியன் ஒரு இடத்தில் உதித்து மறு இடத்தில் மறைந்து விடும். சூரியன் உதிக்கும் திசையைக் கிழக்கு என்போம். மறையும் திசையை மேற்கு என்போம்.
 
பூமி உருண்டையாக இருந்தால் நமக்கு எந்தத் திசையில் சூரியன் மறைகிறதோ அதே திசையில் சூரியன் உதிப்பதை பூமியின் மறு பக்கத்தில் உள்ளவர் காண்பார், அதாவது நமக்குக் கிழக்காக இருப்பது மறு பக்கம் உள்ளவருக்கு மேற்காக அமைகின்றது. நமக்கு மேற்காக இருப்பது மறு பக்கம் உள்ளவருக்கு கிழக்காக அமைகின்றது. இரண்டு கிழக்குகள், இரண்டு மேற்குகள் என்பது எவ்வளவு பொருள் பதிந்தது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
 
பூமி உருண்டையாக இருந்தால் பூமியுடைய ஒவ்வொரு புள்ளியிலும் உதிக்கும் பல திசைகள் உருவாகின்றன; மறையும் திசைகளும் இவ்வாறே இருக்கின்றன.
 
பல உதிக்கும் திசைகள், பல மறையும் திசைகள் என்ற சொல் மூலம் பூமி உருண்டை வடிவிலானது என்ற அறிவியல் உண்மையை உள்ளடக்கி ஒரு மாபெரும் விஞ்ஞானி பேசுவது போல் திருக்குர்ஆன் பேசுகிறது. இதுவும் திருக்குர்ஆன் இறை வேதம் என்பதற்குச் சான்றாகும்.

14 மனிதர்களால் குறையும் பூமி

அவர்களால் பூமி எவ்வளவு குறைந்திருக்கிறது என்பதை அறிவோம். நம்மிடம் பாதுகாக்கப்பட்ட ஏடு உள்ளது. திருக்குர்ஆன் 50:4
 
அல்லாஹ் உங்களைப் பூமியிலிருந்தே வளர்த்துப் பெரிதாக்கினான். திருக்குர்ஆன் 71:17
 
உலகில் வாழும் மனிதர்களால் பூமி குறைகிறது என்ற தத்துவம் இவ்வசனங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் மிகப் பெரிய அறிவியல் உண்மை அடங்கியிருக்கிறது.
 
பூமியில் எவ்வளவு உயிரினங்கள் உருவானாலும் அதற்குரிய எடை வெளியிருலிந்து கிடைப்பதில்லை; பூமியுடைய எடை குறைந்து தான் அது மனிதனாக, மிருகங்களாக, மரங்களாக, மற்ற உயிரினங்களாக உற்பத்தியாகின்றன.
 
இப்படியே முளைக்கின்ற, வளருகின்ற எல்லாப் பொருள்களுமே தங்களின் எடையைப் பூமியிலிருந்து தான் எடுத்துக் கொள்கின்றன.
 
எத்தனை கோடி மக்கள் பெருகினாலும் அதனால் பூமியுடைய எடை கூடாது. இந்த மக்களோடு சேர்த்து பூமியை எடை போட்டால் ஆரம்பத்தில் பூமியைப் படைத்த போது இருந்த எடை தான் இருக்கும். மனிதன் பூமியிலிருந்து தான் தனது எடையை எடுத்துக் கொண்டு வளர்கிறான் என்ற அறிவியல் உண்மையை 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் கூறியிருப்பதன் மூலம் இது இறைவனின் வேதம் தான் என்பது நிரூபணம் ஆகிறது.
 
இதே தத்துவத்தை மற்றொரு கோனத்திலும் திருக்குர்ஆன் பின் வரும் வசனத்தில் கூறுகிறது. அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். (உங்களுக்கு) தங்குமிடமும் ஒப்படைக்கப்படும் இடமும் உள்ளன. புரிந்து கொள்ளும் சமுதாயத்திற்குச் சான்றுகளை விளக்கியுள்ளோம். திருக்குர்ஆன் 6:98
 
இவ்வசனத்தில் கூறப்படும் தங்குமிடம் என்பது இந்த உலகத்தில் வாழுகின்ற பூமியைக் குறிக்கும் என்பதையும், ஒப்படைக்கப்படும் இடம் என்பது மனிதன் மண்ணுக்குள் அடக்கம் செய்யப்படக் கூடிய இடத்தைக் குறிக்கும் என்பதையும் சாதாரணமாக யாரும் புரிந்து கொள்ள முடியும்.
 
ஆனால் திருக்குர்ஆன் பயன்படுத்தியிருக்கின்ற 'ஒப்படைக்கப்படும் இடம்' என்ற வார்த்தை மிகப் பெரிய உண்மையைச் சொல்கிறது.
 
மனிதன் இந்த உலகில் சின்னஞ் சிறிய அளவில் பிறப்பெடுக்கிறான். அவன் பிறப்பெடுத்த போது இருந்த அளவை விட பலப் பல மடங்கு பெரிதாக வளர்ந்து பின்னர் மரணிக்கின்றான். அவன் பிறப்பெடுக்கும் போது இருந்த அந்த எடை பல மடங்கு பெரிதாக எப்படி ஆனது என்றால் இந்த மண்ணிலிருந்து சத்துக்களை அவன் பெறுவதால் தான் ஆனது.
 
மண்ணிருந்து உற்பத்தியாகின்ற தானியங்கள், பருப்புகள், இன்ன பிற சத்துக்களைப் பெற்று தன்னைப் பெரிதாக்கிக் கொண்டு பூமியின் எடையை மனிதன் குறைத்தான்.
 
50 கிலோ எடையுள்ள ஒரு மனிதன் வாழ்கிறான் என்றால் இவன் வாழ்வதனால் மண்ணிருந்து 50 கிலோ குறைந்து விட்டது என்பது பொருள். எங்கிருந்து இந்த 50 கிலோ எடையைப் பெற்றிருக்கின்றானோ அதனை அங்கே அவன் ஒப்படைக்க வேண்டும்.
 
ஒப்படைக்கப்படும் இடம் என்று சொன்னால் இவன் பூமிக்கு உடைமையான ஒரு பொருளாக இருக்கிறான். ஏனெனில் அங்கிருந்து தான் இவன் எடுக்கப்பட்டிருக்கின்றான் என்பது கருத்து.
 
மனிதன் பூமியிலுள்ள மண்ணை நேரடியாகச் சாப்பிடுவதில்லை. மண் வேறு பொருளாக மாறி அதனை மனிதன் சாப்பிட்டு தன் உடலை வளர்த்துக் கொண்டான் என்ற தத்துவத்தை உள்ளடக்கி 'ஒப்படைக்கப்படுகின்ற இடம்' என்ற சொல்லை அல்லாஹ் மிகப் பொருத்தமாகப் பயன்படுத்தியிருக்கிறான்.

 


 

இத்தாலியை பாரசீகத்தை முஸ்லிம்கள் வெற்றி கொள்வார்கள் என்ற முன்னறிவிப்பு.


 

Play Without Downloading 

 Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ