இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க உள்ளதால் ராமேசுவரம் கடற்படை முகாம் வேறு இடத்திற்கு மாற்றம்

28/10/2010 14:54

 

ராமேசுவரத்தில் இருந்து தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க பட இருப்பதால் ராமேசுவரத்தில் உள்ள இந்திய கடற்படை முகாமை வேறு இடத்திற்கு மாற்றமுடிவு செய்யப்பட்டு உள்ளது.

கப்பல் போக்குவரத்து

ராமேசுவரம் அருகே தனுஷ்கோடியில் இருந்து இலங்கை தலைமன்னாருக்கு 1964-ம் ஆண்டு வரை கப்பல் போக்குவரத்து நடந்து வந்தது. அந்த ஆண்டு ஏற்பட்ட கடும் புயலில் தனுஷ்கோடி அழிந்ததை தொடர்ந்து கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன்பின் ராமேசுவரத்திலிருந்து ராமானுஜம் என்ற ஒரே ஒரு கப்பல் மட்டும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலைமன்னாருக்கு இயக்கப்பட்டு வந்தது. இலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலைபுலிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து 1983-ம் ஆண்டிலிருந்து அந்த கப்பல் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.அதன்பின் 1990-ம் ஆண்டு முதல் துறைமுகப்பகுதி இந்திய கடற்படை முகாமாக மாற்றப்பட்டது. விடுதலை புலிகளின் ஊடுருவலை தடுப்பதற்காகவும் பாதுகாப்பு பணியை முன்னிட்டும் அங்கு இந்திய கடற்படை முகாம் அமைக்கப்பட்டது. 1 கமான்டர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட கடற்படை கமான்டோக்கள் முகாமில் தங்கியிருந்து ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

வேறு இடத்துக்கு...

இந்த நிலையில் இப்போது மீண்டும் ராமேசுவரம்- தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கு இந்திய-இலங்கை அரசுகள் முன் வந்துள்ளன. இதனால் தற்போது இந்திய கடற்படை முகாம் செயல்பட்டு வரும் இடத்தில் மீண்டும் சுங்கத்துறை அலுவலகம் வரவுள்ளது. அதற்காக அந்த இடத்தை மீண்டும் தங்களிடம் தரும்படி துறைமுக கடல்சார் வாரிய அலுவலகத்திற்கு சுங்கத் துறையினர் கடிதம் அனுப்பியுள்ளனர். அதை துறைமுக வாரியம் மத்திய அரசின் அனுமதிக்கு அனுப்பி வைத்துள்ளது.

இதன் காரணமாக 20 வருடமாக செயல்பட்டு வரும் இந்திய கடற்படை முகாமை வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்துள்ளனர். அதற்காக இடத்தை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. சேரான்கோட்டை கடற்கரை பகுதியை தாசில்தார் ராஜேந்திரன், வருவாய்த்துறை அதிகாரிகள், கடற்படை கமான்டர் அகர்வால் ஆகியோர் பார்வையிட்டனர். கடற்படையினர் கேட்கும் இடத்தை வருவாய்த்துறையினர் கொடுத்த பின்பு விரைவில் கடற்படை முகாம் வேறு இடத்திற்கு மாற்றப்படவுள்ளது.

தற்சமயம் ராமேசுவரம் கடற்படையின் ரோந்து கப்பல்கள் நிறுத்தும் துறைமுகம் மரத்தினால் ஆனது. அதை விரிவுபடுத்தி கப்பல் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படலாம் என தெரிகிறது.