இளைஞர்கள் வேலைவாய்ப்பு பயிற்சி பெறுவது எப்படி? அரசாணையில் விவரங்கள்

04/09/2010 11:19

படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பயிற்சிகளை அளிப்பதற்கான விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதற்கான அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள்:

வேலைவாய்ப்பு பெறுவதற்கான பயிற்சிகள் இளைஞர்களுக்கு அளிக்கப்படும் என்று சுதந்திர தின உரையில் முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார். அதன்படி, இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், தனியார் தொழில் துறை நிறுவனங்களே இளைஞர்களைத் தேர்வு செய்யும். அவர்களுக்குப் பயிற்சி அளித்து பணியிலும் அமர்த்தும். இந்தப் பணிகளை ஒருங்கிணைத்து அதற்கான நிதி மற்றும் பிற உதவிகளை அரசு வழங்கும்.

பள்ளிப் படிப்பை முடித்த, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள இளைஞர்களுக்குத் திறனார்ந்த பணிகளுக்கான பயிற்சி அளிக்கப்படும். பட்டதாரிகள் மற்றும் பொறியாளர்களுக்கு உயர் திறனார்ந்த பணிகளுக்கான பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தத் திட்டம் மூன்று நிலைகளில் செயல்படுத்தப்படும். மாவட்டவாரியாக முகாம்கள் நடத்தப்பட்டு கல்வித் தகுதி, விருப்பம் அடிப்படையில் இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவர். தகுந்த தனியார் தொழில் நிறுவனங்களுடன் அவர்கள் இணைக்கப்படுவர். தனியார் தொழில் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுவதற்கேற்ற திறனார்ந்த பயிற்சியை அளிக்க நடவடிக்கை எடுக்கும்.

Dinamani