இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் தீவிரம் குறித்து உரையாற்ற வந்த விஜய குமார் அமரிக்க விமான நிலையத்தில் கைது

26/08/2010 15:41

ஜிகாதியை ஊக்குவிக்கும் புத்தகம், கைத் துப்பாக்கி ஆகியவற்றை வைத்திருந்ததாக அமரிக்க விமான நிலையத்தில் இந்திய ஆவணப் படத்தயாரிப்பாளர் விஜய குமார் (40) என்பவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

ஹூஸ்டனின் ஜார்ஜ் புஷ் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட விஜய குமாரிடம் அந்நாட்டு புலனாய்வு போலீஸôர் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். தீவிரவாதிகள் பட்டியலில் அவர் பெயர் இடம்பெற்றுள்ளதா என்று ஆய்வு செய்தனர். ஆனால் அவரது பெயர் தீவிரவாதிகள் பட்டியலில் இடம்பெறவில்லை.

இதையடுத்து அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டாம் என புலனாய்வு போலீஸôர் தீர்மானித்தனர். விஜய குமாரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 5000 அமெரிக்க டாலரை செலுத்தி ஜாமீன் பெற்றுக்கொள்ளுமாறு நீதிபதி டேவிட் மென்டோஸ் உத்தரவிட்டார்.

இதுகுறித்து விஜய குமாரின் வழக்கறிஞர் கிராண்ட் செய்னர் கூறியது: அமெரிக்காவில் உள்ள ஹிந்துக்கள் நல அமைப்பினரை சந்தித்து இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் தீவிரம் குறித்து உரையாற்ற விஜய குமார் வந்துள்ளார். இதுதவிர்த்து அவரது அமெரிக்கப் பயணத்தில் எவ்வித உள்நோக்கமும் இல்லை.

அவருக்கும் எந்த ஒரு தீவிரவாத அமைப்புக்கும் தொடர்பில்லை. அவரால் அமெரிக்கர்களுக்கும் அச்சுறுத்தல் இல்லை என்பது உறுதியாகிவிட்டது. அவர் ஜிகாதியை ஊக்குவிக்கும் புத்தகங்கள், பித்தளை வளையங்கள், கைத் துப்பாக்கி, 1000 அமெரிக்க டாலர்கள் வைத்திருந்தது உண்மைதான்.

அவர் தற்காப்புக்காக கைத் துப்பாக்கியை வைத்திருந்துள்ளார். ஜிகாதி குறித்து படித்து தெரிந்து கொண்டு அதன் தீவிரம் குறித்து உரைநிகழ்த்துவதற்கே அவர் அந்த புத்தகத்தை வாங்கியுள்ளார். விமான நிலையத்துக்குள் இத்தகைய புத்தகங்கள், கைத் துப்பாக்கி போன்றவற்றை கொண்டுவந்தது குற்றம். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் செய்னர்.