இஸ்லாமியர்கள் வாங்கிய கடனுக்கான வட்டியை புதுச்சேரி அரசு செலுத்தும்: மு. கந்தசாமி

24/10/2010 16:56

இஸ்லாமியர்கள் வாங்கிய கடனுக்கான வட்டியை அரசே செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று சமூகநலத்துறை அமைச்சர் மு. கந்தசாமி கூறினார்.

 

 

புதுச்சேரி மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அரசியல் விழிப்புணர்வு யாத்திரை மற்றும் அரசுக்கு நன்றி அறிவிப்பு ஊர்வலம் கன்னியக்கோயிலில் இருந்து சனிக்கிழமை தொடங்கியது.

 

 

இதைத் தொடங்கி வைத்து அமைச்சர் கந்தசாமி பேசியது:

 

கடந்த தேர்தலில் இஸ்லாமிய சமுதாய மக்கள் காங்கிரஸுக்கு அதிக அளவில் வாக்களித்தனர்.

 

இஸ்லாமியர்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அமைச்சர், முதல்வர், அமைச்சர்கள் ஒன்று கூடி இவர்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வியில் 2 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க நடவடிக்கை எடுத்தோம். இதற்காக அரசுக்கு நன்றி தெரிவித்து ஊர்வலம் நடத்துவதால் கடமைப்பட்டு இருக்கிறோம்.

 

அரசு தள்ளுபடி செய்யும் என்ற எண்ணம் இல்லாமல் சிறுபான்மையினர் கழகத்தில் வாங்கிய கடனில் இவர்கள் முறையாகத் தொழில் நடத்தி தொகையைச் செலுத்தி வருகின்றனர்.

 

எனவே வாங்கிய கடனுக்கான வட்டியை அரசே செலுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்காக கோப்புகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இஸ்லாமியர்களின் ஆதரவு காங்கிரஸ் அரசுக்கு எப்போதும் இருப்பதால் காங்கிரஸ் அரசு அவர்களுக்கு துணை நிற்கும் என்றார் அமைச்சர் கந்தசாமி.

 

தினமணி